ஆன்மிகம்

கடந்ததை மறந்து புதுவாழ்வு பெறுங்கள்

Published On 2017-03-13 10:33 IST   |   Update On 2017-03-13 10:33:00 IST
கடந்த காலங்களில் செய்தவை அனைத்தையும் மறந்துவிட்டு, வருகின்ற காலங்களில் இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ அழைப்பு கொடுக்கப்படுகிறது.
மனம் மாறுங்கள் புதுவாழ்வு பெறுங்கள் என்ற செய்தி நம் இதயங்களுக்கு ஆறுதல் தருகின்ற, நம்பிக்கையை ஊட்டுகின்ற செய்தியாக இருக்கிறது. அதாவது கடந்த காலங்களில் செய்தவை அனைத்தையும் மறந்துவிட்டு, வருகின்ற காலங்களில் இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ அழைப்பு கொடுக்கப்படுகிறது. முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்.

இதோ புதுச்செயல் செய்கிறேன் ( எசா 43:18-19) என பழைய வாழ்க்கை தவறுகளை கணக்கு பார்த்துக் கொண்டு இருக்காமல், அனைத்து கடன்களையும் அழித்துவிட்டு, புதுபயணம் தொடர அழைப்பு விடுக்கிறார். நன்மைகளையே செய்தேன், உன் வாழ்வில் புதுமைகளையே கொடுத்தேன் (எசா 43:11-12, 16-17) என தன் பங்கை பட்டியலிட்டு, தீமைகளையே வாழ்வாகக் கொண்டிருந்தீர்கள் என நம் தவறுகளை சுட்டிக் காட்டினாலும் (எசா 43:22-28) முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள் (எசா 43:18) எனும் ஒரு வார்த்தையில் தன் தாயுணர்வையும், தந்தைக்குரிய பரிவையும் இறைவன் காட்டுகிறார்.



* சமாரியப் பெண்ணின் பழைய வாழ்வு பாவ வாழ்வு, விபசார வாழ்வு. ஆயினும் வாழ்வுதரும் தண்ணீர் வழியாக புதுவாழ்வு பெற்று புதுபடைப்பாகின்றார் (யோவா 4:1-26)

* பாவியான பெண்ணொருத்தி தனது கண்ணீரால் ஏசுவின் பாதங்களை கழுவி, கூந்தலால் துடைத்து தைலம் பூசி முத்தம் கொடுத்ததாக பார்க்கின்றோம். இங்கே தனது கடந்த கால வாழ்வை மறந்து, கடந்து புதுவாழ்வு வாழ்கிறார்.

* எப்படியும் வாழலாம் என வாழ்ந்து ஏழைகளை சுரண்டி வாழ்ந்த சக்கேயு, ஏசுவை சந்தித்த மறுகனமே மறுவாழ்வு பெற்று புதுபடைப்பாகின்றார்.

* யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன என விசுவாசஅறிக்கையிட்ட பேதுருகூட ஏசுவை மறுதலிக்கிறார். ஆயினும் பழையது மறந்து கண்ணீர் வடித்து, மனம் மாற்றம் பெற்று புதுபடைப்பாக மாறுகிறார்.

* கடந்த வாழ்வைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மறந்துவிடுங்கள். புதுப்படைப்பாக மாற முயலுங்கள் என்கிறார். எனவே பாவம் செய்துவிட்டேனே என மனதை குத்திக் கொண்டிராமல், அவைகளை களைந்துவிட, மனம் வருந்தி மீண்டும் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக மாற தொடர்ந்து முயல்வோம்.

-அருட்தந்தை அல்போன்ஸ், பூண்டி

Similar News