ஆன்மிகம்

பைபிள் மாந்தர்கள் சேவியர்: அனனியா, சப்பிரா

Published On 2017-02-09 14:31 IST   |   Update On 2017-02-09 14:31:00 IST
போலித்தனமாய் பெருமை கொள்பவர்களை கடவுள் விரும்புவதில்லை. எனவே உண்மையாய் அவர் பாதம் பணிந்து, தாழ்மையை வாழ்க்கை முறை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் பேதுருவும், யோவானும் மற்ற அப்போஸ்தலர்களும் ‘இயேசுவே மீட்பர்’ என்று மக்களிடையே உரையாற்றி ஏராளமான மக்களை திருச்சபையில் சேர்த்தனர். அது தான் ஆதித்திருச்சபை என்று அழைக்கப்படுகிறது.

அவர்கள் பகிர்தலிலும், ஒற்றுமையிலும் சிறந்து விளங்கினார்கள். அந்தத் திருச்சபையில் இணைந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய உடைமைகளை எல்லாம் விற்று பொதுவில் வைத்தார்கள். பின் தேவைக்கேற்ப அவற்றை மக்கள் பகிர்ந்து கொண்டார்கள். யாரும் அளவுக்கு அதிகமாய் ஆசைப்படவில்லை. எல்லோருடைய தேவைகளும் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் திருச்சபையின் நடைமுறைகள் மறைநூல் அறிஞர்கள், குருக்கள், அரச அதிகாரிகள் அனைவருக்கும் மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. பெரும் பணக்காரர்கள் கூட தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்று பொதுவில் வைப்பதை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு விரும்பியது அது தானே ‘உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு’ என்பது தானே அவருடைய போதனை.

அந்தக் கூட்டத்தில் அனனியா என்றொரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் சப்பிரா. அவர்களும் திருச்சபையின் மீது அதிக ஆர்வம் கொண்டு பேதுருவின் சபையில் இணைந்தவர்கள். அவர்களுக்கும் தங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் வந்தது.

அனனியா சென்று தன்னுடைய சொத்தை எல்லாம் விற்றான். அவனால் நம்பமுடியவில்லை. ஏராளமான செல்வம் அவனுடைய கைகளில் இருந்தது. அவற்றைக் கொண்டு பேதுருவிடம் ஒப்படைக்க நினைத்துக் கொண்டிருந்தபோது அவர்களுடைய மனதில் சஞ்சலப் பேய் புகுந்து கொண்டது.

நமக்குத் தான் இத்தனை செல்வம் இருக்கிறதே. ஏன் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும்? கொஞ்சத்தை நமக்காய் வைத்துக் கொள்ளலாமே? என்று அவர்கள் சிந்தித்தார்கள்.

ஒருவேளை நாளை இந்தச் சபை இல்லாமல் போனால் நாம் வாழ்வதற்கு செல்வம் மிகவும் முக்கியம். எனவே சொத்தில் ஒருபாகத்தை யாருக்கும் தெரியாமல் தனக்கென வைத்துக் கொண்டு மிச்சத்தை பேதுருவிடம் ஒப்படைப்பதென்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

மறுநாள் காலையில் சொத்தில் ஒருபகுதியைத் தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தை பேதுருவின் முன்னிலையில் சமர்ப்பித்தான், அனனியா.

‘ஐயா... இதோ என்னுடைய அனைத்து சொத்துக்களையும் விற்று அதை உம்மிடம் ஒப்படைக்கிறேன்’.

பேதுரு அவனைப் பார்த்தார்.

‘அனனியா! ஏன் பொய் சொல்கிறாய்? சொத்துக்களை நீ விற்கவேண்டுமென்றோ, அதை இங்கே வைக்கவேண்டுமென்றோ நான் சொன்னேனா? யாராவது உன்னைக் கட்டாயப்படுத்தினார்களா? விற்பதும் அதை அளிப்பதும் உன் விருப்பம். ஆனால் நீ ஏன் கடவுளின் முன்னால் பொய் சொல்கிறாய்? சாத்தான் உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்கு நீ ஏன் அனுமதி அளித்தாய்?’ பேதுரு கேட்டார்.

பேதுரு சொன்னதைக் கேட்டதும் அனனியா அதிர்ச்சியடைந்தார். அங்கேயே சுருண்டு விழுந்து இறந்து போனார்!

குழுவில் இருந்த இளைஞர்கள் நிகழ்ந்தவற்றைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் அனனியாவை துணியால் சுற்றி எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்தார்கள். மக்கள் அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.

மூன்று மணி நேரம் கழிந்தபின் அனனியாவின் மனைவி வந்தாள். அவளுக்கு அங்கே நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. தன்னுடைய கணவன் ஒரு பெரும் தொகையைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இப்போது பெரும் மதிப்பு இருக்கும். தன்னையும் அவர்கள் பெரும் மரியாதையுடன் வரவேற்பார்கள் என்று அவளுடைய மனம் எண்ணிக் கொண்டது.

அவள் உள்ளே வந்ததும் பேதுரு அவளிடம்,

‘உங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று விட்டீர்களா?’ என்று கேட்டார்.

‘ஆம், விற்று விட்டோம். அந்தப் பணத்தை முழுவதும் என் கணவர் இங்கே கொண்டு வந்து கொடுத்திருப்பாரே’, என்று அவள் சொன்னாள்.

‘இவ்வளவு பணத்துக்குத் தான் சொத்தை விற்றீர்களா?’ பேதுரு கேட்டார்.

‘ஆம்... இவ்வளவுக்குத் தான் விற்றோம்’

பேதுரு அவளைப் பார்த்து, ‘நீங்கள் இரண்டு பேருமே ஏன் கடவுளின் முன்னிலையில் பொய் சொன்னீர்கள்? சாத்தான் உங்களை ஆட்கொண்டு விட்டானே!’ என்றார்.

அவள் கலக்கத்துடன் பேதுருவைப் பார்த்தாள்.

‘இதோ... உன் கணவனை அடக்கம் செய்தவர்கள். இவர்கள் இப்போது உன்னையும் அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்வார்கள்’ என்றார்.

அவ்வளவு தான். அவள் அந்தக் கணமே அந்த இடத்திலேயே இறந்து விழுந்தாள்.

கடவுளின் முன்னிலையில் சொல்லும் ஒரு சிறு பொய்கூட தங்கள் உயிரை அழித்துவிடும் என்று சபையில் புதிதாய் சேர்ந்தவர்கள் மனதுக்குள் குறித்துக் கொண்டார்கள்.

போலித்தனமாய் பெருமை கொள்பவர்களை கடவுள் விரும்புவதில்லை. செருக்கு கொண்ட மனிதர்களை அவர் எதிர்க்கிறார். பணிவு கொண்ட மனிதர்களை அரவணைக்கிறார். தாங்கள் ஆன்மிகவாதிகள் என காட்டிக் கொள்பவர்களை அவர் எப்போதுமே வெறுப்பவர். எனவே உண்மையாய் அவர் பாதம் பணிந்து, தாழ்மையை வாழ்க்கை முறை ஆக்கிக் கொள்ள வேண்டும். இதுவே இந்த நிகழ்ச்சி கற்றுத் தரும் பாடமாகும்.

Similar News