ஆன்மிகம்

இயேசுவின் தியாகத்தை பற்றி பார்க்கலாம்

Published On 2016-10-04 14:44 IST   |   Update On 2016-10-04 14:44:00 IST
இன்று உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் அனுசரிக்கப்படுகின்ற புனித வெள்ளியைக் குறித்தே புனித விவிலியத்தின் வாயிலாக புனித ராயப்பர் (பேதுரு) மேற்கண்டவாறு கூறுகிறார்.
உங்களை விடுதலையாக்குவதற்குக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும், வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள ரத்தமாகும்.' (1ராய:1: 18-19)

இன்று உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் அனுசரிக்கப்படுகின்ற புனித வெள்ளியைக் குறித்தே புனித விவிலியத்தின் வாயிலாக புனித ராயப்பர் (பேதுரு) மேற்கண்டவாறு கூறுகிறார்.

விலை மதிப்பில்லாத அவர் ரத்தம், நம் பாவங்களைக் கழுவவும் நம் விடுதலைக்காகவும் சிந்தப்பட்டது. ""கடவுள் மீது விசுவாசம் வையுங்கள்; என் மீதும் விசுவாசம் வையுங்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்'' (அருளப்பர்:14-1) என்று இறைமகன் கூறியதை அனைவரும் அலட்சியம் செய்தார்கள். குறிப்பாக அவருடன் சீடர்களாய், உற்ற தோழர்களாய் இருந்தவர்களே அவரைப் பற்றி புரிந்து கொள்ளாமல் புறக்கணித்ததை என்னென்பது?

எதிராளிகளிடம் கையளிக்கப்பட்ட இயேசு

கெத்சமனித் தோட்டத்தில் கள்வனைப்போல எதிராளிகள் சதி செய்து இயேசுவைப் பிடிக்கின்றபோது அனைத்துச் சீடர்களும் உயிருக்குப் பயந்து நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்ததுபோல சிதறி ஓடினார்கள்.

அவர்களில் ஒரு சீடன் துரோகியாக மாறி, அவரைக் காட்டிக் கொடுக்கவே துணிந்தான். அவருக்குத் ""துணையாக கடைசி வரை கூடவே வருவேன்'' என்று கூறிய மற்றொரு சீடனோ- அவரை "தெரியவே தெரியாது' என்று ஒரேயடியாக மறுதலித்தலின் மூலம் இயேசு ஆதரவின்றி, சாட்சிகளின்றி பெருங்குற்றவாளியைப் போல எதிராளிகளிடம் கையளிக்கப்பட்டார்.

சோதனை ஏற்படுத்திய வேதனை

மேலும் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர் நீத்து, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்து வந்தபோது பிற சீடர்கள் அதிசயித்து அவரைக் கண்டனார். அப்போதும் அவரிடம், ""உயிர்த்தெழுந்த இயேசு நீங்கள்தானா?'' என்பது போன்று சந்தேகப்பட்டு கேள்விகள் எழுப்பி, சோதனை செய்து வேதனைக்குள்ளாக்கினார் ஒரு சீடர்.

மேற்கண்ட வேதனை நிறைந்த வரலாற்று நிகழ்வுகள், இறை மகன் இயேசுவின் வாழ்வில் இடம் பெற்றதைப் புனித விவிலியத்தில் புனித மத்தேயு, புனித அருளப்பர் (யோவான்) ஆகியோர் எழுதிய பகுதிகளின் வாயிலாகக் காண்போம்.

இயேசுவைக் காட்டிக் கொடுத்த துரோக நிகழ்வு

இயேசு கெத்சமனித் தோட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அவருடைய பன்னிரு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கு வந்தான்.

அவனோடு மூப்பர்களும், குருக்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக் கொடுக்க வந்த யூதாஸ், ""நான் ஒருவரை முத்தமிடுவேன்.

அவர்தான் இயேசு; அவரைப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, "ரபியே வாழ்க!' என்று கூறிக் கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், ""தோழா எதற்காக வந்தாய்? முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?'' என்றார். (மத்தேயு 26: 47-56)

இயேசுவைத் "தெரியாது' என மறுதலித்த நேர்மையற்ற நிகழ்வு


இயேசுவைக் கைது செய்து தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு சென்றபோது ராயப்பரும், அருளப்பரும் (பேதுரு, யோவான்) விசாரணையின் முடிவைத் தெரிந்து கொள்வதற்காகத் தொலைவில் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். வீட்டு உள் முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்திருந்தவர்களோடு ராயப்பரும் இருந்தார்.

அப்போது பணிப் பெண் ஒருவர் அவரை உற்றுப் பார்த்து, "இவனும் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்' என்றார். அவரோ, "அம்மா! அவரை எனக்குத் தெரியாது' என்று மறுதலித்தார்.

சிறிது நேரத்திற்குப் பின் அவரைக் கண்ட வேறு ஒருவன், ""நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்'' என்றார். ராயப்பர் ""இல்லையப்பா!'' என்று இரண்டாம் முறையாக மறுதலித்தார். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மற்றொருவர், ""உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்'' என்று வற்புறுத்திக் கூறினார். ராயப்பரோ, ""நீர் குறிப்பிடுவதைப் பற்றி எனக்குத் தெரியாது'' என்று மூன்றாம் முறையும் மறுதலித்தார். ""சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்'' என்று இயேசு கூறியது நிறைவேறிற்று. (மத்தேயு 26: 69-75)

இயேசுவைச் சந்தேகப்பட்ட அவ நம்பிக்கை நிகழ்வு


இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சி கொடுத்தபோது, பன்னிருவருள் ஒருவரான தோமா (தோமையார்) அவர்களோடு இல்லை. அவர் வந்ததும் மற்ற சீடர்கள், ""இயேசுவைக் கண்டோம்!'' என்றுரைத்தனர்.

ஆனால் தோமா, ""அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை விட்டுச் சோதனை செய்தாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார்.

எட்டு நாட்களுக்குப் பிறகு இயேசுவின் சீடர்கள் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் உடனிருந்தார். இயேசு அவர்கள் முன் தோன்றி, ""உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என்றார். பிறகு தோமாவிடம், ""இதோ என் கைகள். இங்கே உன் விரலை இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைக் கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ""நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்'' என்றார். இயேசு அவரிடம் ""நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலேயே நம்புவோர், பேறு பெற்றோர்'' என்றார். (யோவான் 20:24-29)

தேவை, வாழ்வில் சீரிய வழி!

இறைமகன் இயேசுவோடு இணைந்து, தோழர்களாக வாழ்ந்து, அவர் செயல்களைக் கண்ணுற்று, அவரோடு ஒரே பந்தியில் உண்டு களித்த சில சீடர்களே அவருக்கு எதிராகச் செயல்பட்டதை நினைக்கின்றபோது நாம் வேதனைக்குள்ளாகின்றோம். நாம் இந்த நிகழ்வுகளை மனதில் நிறுத்தி, சீலமற்ற முறைகளைத் தவிர்த்து நம் வாழ்வில் சீரிய வழியில் செல்வோம்.

"என்னைப் பின் செல்ல விரும்புகின்றவன் தன்னையே மறுத்து தன் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும்'' (மத்தேயு 16:24) என்ற இறை வார்த்தையை மனதில் இறுத்தி இறைமகனின் வார்த்தைக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, எல்லா வல்ல ஆண்டவரின் ஆசீரைப் பெறுவோமாக!

Similar News