ஆன்மிகம்

கர்த்தரின் கரம்.. தாங்கும் கரம்..

Published On 2016-09-30 08:18 IST   |   Update On 2016-09-30 08:18:00 IST
ஒரு தாய் தன் மகனை நிச்சயம் மறக்கமாட்டாள். அவள் மறந்தாலும் கர்த்தர் நம்மை மறப்பதில்லை.
‘இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்’ (ஏசா.49:16).

ஒரு தாய் தன் மகனை நிச்சயம் மறக்கமாட்டாள். அவள் மறந்தாலும் கர்த்தர் நம்மை மறப்பதில்லை. ‘கர்த்தர் நம்மை அவருடைய உள்ளங்கைகளில் வரைந்திருக்கின்றார்’ என்பதற்கு விளக்கம், அவரது கரம்தான் நம்மை உண்டாக்கி உருவாக்கிற்று. தாயின் வயிற்றில் தோன்றி கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் நம்மைத் தாங்குகின்றார். அவருடைய வலது கரம் நமக்கு இரட்சிப்பை கொடுக் கிறது.

நமது முன்புறத்திலும், பின்புறத்திலும் நம்மை நெருக்கி அவர் கரத்தை நம்மேல் வைக்கிறார். சமுத்திரத்தின் அடியாழத்தில் போய்த் தங்கினாலும் அவரது கரம் நம்மை பிடித்துக்கொள்ளும். உயரத்திலிருந்து அவர் கரத்தை நீட்டி ஆபத்திலிருந்து தப்புவிக்கிறார். நாம் தூங்கும் போது கூட தேவனின் கரம் நம்மை தாங்குகிறது. எந்த நேரத்திலும் யாவரையும் தாங்கும் கரம் தேவனின் கரமாகும்.

நாம் துக்கத்தில் சோர்ந்து போகும் போது நம்மை தேற்றி உயர்த்துகின்ற கரம். சத்துருவின் கிரியைகளை நீக்கி நம்மை பாதுகாக்கும் கரம். நோயாளிகளை குணமாக்கும்படி அவருடைய கரத்தை நீட்டி அனைவருக்கும் சகல வியாதிகளையும் குணமாக்குகிறார். நமது காலங்கள் அவர் கரத்திலிருக்கிறது. அவரது கரம்தான் எப்பொழுதும் நம் முடைய துணையாக இருக்கும்.

‘உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது. ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது’ (2 நாளா.20:6).

சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு வல்லமையுள்ள புஜங்களும், பராக்கிரமம் உள்ள கரங்களும் உள்ளது. அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன் போன்று இருக்கிறது. தேவனின் கரம் உலகில் உள்ள அனைத்தையும் சிருஷ்டித்து நம்மை அரவணைக்கிறது.

‘என் கரங்கள் வானங்களை விரித்தன’ (ஏசா.45:12). ‘என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தியது’ (ஏசா.48:13).

அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று. அவருடைய கரத்திலிருந்து கிரகணங்கள் வீசப்பட்டது. கற்பாறையிலிருந்து நீர் ஊற்றை புறப்படச் செய்தார். தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருக் கிறார்.

அவருடைய கரத்திலே சமத்துவமும் வல்லமையும் உண்டு. எவரையும் மேன்மைப்படுத்தவும் உயர்த்தவும் அவருடைய கரத்தால் ஆகும். எந்த மனுஷனாலும் கிரகிக்கக் கூடாத மகா பயங்கரமான செயல்களை செய்கிறார். அக்னிமயமான பிரமாணம் அவருடைய வலது கரத்திலிருந்து புறப்பட்டது. ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ண முடியாத அதிசயங்களையும் அவருடைய கரத்தினால் எப்பொழுதும் செய்து கொண்டு இருக்கிறார்.

‘நீ உன் கோலை ஓங்கி உன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டி சமுத்திரத்தை பிளந்துவிடு. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போவார்கள்’ (யாத்.14:16).

எகிப்து தேசத்தில் 430 வருடம் சிறைப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு பாலும், தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்கு அவரது வலக்கரத்தால் அழைத்து வருகின்ற வழியில் முன்பக்கம் செங்கடல், பின்பக்கம் எகிப்தின் யுத்த சேனைகள், இரு பக்கமும் பெரிய மலைகள்.எங்கும் ஓட இயலாத சூழ்நிலை ஏற்பட்ட போது எகிப்தியரின் யுத்த வீரர்கள் தங்களுக்குப் பின்னே நெருங்கி வருகிறதை பார்த்து இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி ‘நீ உன் கோலை ஓங்கி உன் கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டி சமுத்திரத்தை பிளந்துவிடு’ என்றார். மோசேயின் கரத்தின் மேல் கர்த்தருடைய பலத்த கரம் இருந்தது.

தேவன் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்தார். செங்கடல் தண்ணீர் இரண்டாக பிளந்து இரு பக்கமும் மதில்போல் நின்றது. ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்து போயிற்று. இஸ்ரவேல் ஜனங்கள் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். தேவனுடைய வலதுகரம் அவர்களை தாங்கி நடத்தியது.

‘நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும் உன் தேவனுடைய கரத்தில் ராஜ முடியுமாயிருப்பாய்’ (ஏசா.62:3).

அவருடைய இரட்சிப்பின் கேடயத்தை எனக்குத் தந்து வலது கரத்தினால் என்னை தாங்குகிறார். தேவன் கொடுக்கும் ஞானம் நமது தலைக்கு அலங்காரமான மகிமையான கிரீடத்தை சூட்டும். மரணபரியந்தம் உண்மையாய் ஜீவிக்கிறவர்களுக்கு ஜீவ கிரீடத்தை கொடுக்கிறார். ஆத்துமா ஆதாயம் செய்கிறவர்களுக்கு அழிவில்லாத கிரீடத்தை கொடுக்கிறார். விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிறவர்களுக்கு நீதியின் கிரீடத்தை கொடுக்கிறார். அவர்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு மகிழ்ச்சியின் கிரீடத்தை கொடுக்கிறார். தேவனுடைய மந்தையை மேய்க்கிறவர்களுக்கு மகிமையுள்ள வாடாத கிரீடத்தை கொடுக் கிறார்.

உண்மையாய் கர்த்தரிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன் மேல் இருக் கும். பரிசுத்தமாய் ஜீவிக்கின்றவர்களுக்கு பரிசுத்தமுள்ள பொற்பட்டயத்தின் கிரீடத்தை அவர்கள் தலையின்மேல் கட்டு கிறார். அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன (வெளி.19:12).

நம்மை தேவனுடைய கரத்தில் ராஜமுடியாக வரைந்து வைத்திருக்கிறார். அவருடைய கரத்தின் நிழலினால் நம்மை மறைக்கிறார், ஆமென். 

Similar News