ஆன்மிகம்
இயேசுவைச் சிக்க வைக்க நினைத்த திருச்சட்ட வல்லுநர்
கண்ணில் தெரியும் சகோதரனுக்கு அன்பு செய்யாமல், கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு யாரும் அன்பு செய்து விட முடியாது
இயேசு வழக்கம் போல மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். இயேசுவின் வார்த்தைகளால் மக்கள் எல்லோரும் அவருடைய பக்கமாகத் திரும்பிக் கொண்டிருப்பது திருச்சட்ட அறிஞர்களுக்கும், குருக்களுக்கும் மிகப்பெரிய எரிச்சலாய் இருந்தது.
திருச்சட்ட வல்லுநர் ஒருவர் எழுந்தார்.
‘போதகரே, முடிவில்லா வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.
இயேசுவைச் சிக்க வைக்க வேண்டுமென அந்த கேள்வியைக் கேட்டார். அது இயேசுவுக்குப் புரிந்தது.
‘நீர் நிலை வாழ்வு பெற விரும்புகிறீரா? நிலைவாழ்வைக் குறித்து சட்டதிட்டம் என்ன சொல்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?’ இயேசு கேட்டார்.
‘உன் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆற்றலோடும், முழு உள்ளத்தோடும் நீ கடவுளை அன்பு செய்ய வேண்டும். உன் மீது நீ அன்பு செய்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய்யவேண்டும்’ சட்ட வல்லுனர் தயக்கமின்றிப் பதில் சொன்னார்.
‘சரியாகச் சொன்னீர். அதை மட்டுமே செய்தால் போதும். அதில் எல்லாம் அடங்கியிருக்கின்றன’ இயேசு சொன்னார்.
‘அது சரி... இதிலே சொல்லப்பட்டிருக்கும் அயலான் என்பவர் யார்?’ அவர் கேட்டார்.
இயேசு ஒரு கதையை சொன்னார்.
ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் சென்று கொண்டிருந்தார். அவருடைய பையில் நிறைய பணம் இருந்தது. வியாபாரத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார். எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் செல்லும் பாதையானது மிகவும் இடர்கள் நிறைந்தது. திருடர்கள், கொள்ளைக்காரர்களின் நடமாட்டம் மிகுந்த பகுதி. அந்த பாதையில் யாருமே தனியே பயணிப்பதில்லை. ஆட்கள் இல்லாத ஒரு பகுதியில் வந்தபோது மறைந்திருந்த கள்வர்கள் அவர் மேல் பாய்ந்து அவரைத் தாக்கினார்கள். அவரை அடித்து குற்றுயிராக்கிப் போட்டு விட்டுப் போனார்கள்.
அவ்வழியே ஒரு குரு வந்தார். வழியோரத்திலே விழுந்து கிடக்கும் அவரைக் குருவின் கண்கள் கண்டன. ஆனால் அவர் ஆலயப் பணிக்காகச் சென்று கொண்டிருக்கிறார். ‘இவனுக்கு உதவி செய்யப் போனால் ஆலய பணிகள் எல்லாம் தாமதமாகிவிடும். அவனைத் தொட்டால் தீட்டாகிவிடவும் கூடும். இவனைக் கவனிக்கும் பணியை வேறு யாராவது பார்த்துக் கொள்ளட்டும்’, என்று மனதுக்குள் பல்வேறு விதமாய் எண்ணிக் கொண்டே அந்த குரு அவனைக் கடந்து சென்றார்.
அவ்வழியே குருவுக்கு உதவி செய்யும் லேவியர் ஒருவரும் வந்தார். ‘இவனைக் காப்பாற்றவோ, இவனுக்கு உதவி செய்யவோ அவருடைய மனம் சொல்லவில்லை. அவனுடைய அருகில் செல்லக் கூட விரும்பாதவராக அவர் விலகிச் சென்றார்’.
அவ்வழியே ஒரு சமாரியர் வந்தார். அவர் அடிபட்டுக் கிடப்பவனைப் பார்த்தார். குற்றுயிராய்க் கிடப்பவன் ஒரு யூதன் என்பது அவருக்குத் தெரிகிறது. அவனுடைய அருகே சென்று அவனுடைய காயங்களில் திராட்சை மதுவும், எண்ணையும் ஊற்றி, தன்னிடமிருந்த துணிகளினால் அவனுடைய காயங்களைக் கட்டி முதலுதவி செய்தார்.
இயேசு இவ்வாறு சொன்னதும் கூட்டம் மிகவும் அமைதியானது. காரணம் சமாரியர்களும், யூதர்களும் கீரியும், பாம்பும் போல உரசிக் கொண்டிருந்த காலம் அது. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிகள் ஏதும் செய்வதில்லை. கடவுளை வழிபடும் முறைக்காகவும், எங்கே வழிபடவேண்டும் என்பதற்காகவும் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். இயேசு தொடர்ந்தார்.
முதலுதவி செய்ததுடன் அவர் விலகிவிடவில்லை. தன்னுடைய குதிரையின் மீதே அவரை அமரவைத்து ஒரு சாவடிக்கு எடுத்துக் கொண்டு போய் ஒப்படைத்தார். சாவடிக்காரனிடம் பணத்தைக் கொடுத்து ‘இவனை நன்றாகக் கண் காணியுங்கள். இவன் விரைவில் நலம்பெறவேண்டும்’ என்று சொல்லிக் கொண்டு விலகினார்.
இயேசு கதையை சொல்லி நிறுத்தினார். பின் வல்லுநரை நோக்கி ‘கள்வர் கையில் அகப்பட்ட அந்த மனிதனுக்கு, இந்த மூவரில் யார் அயலான் என்று நீ நினைக்கிறாய்?’ என்று கேட்டார்.
‘அவனுக்கு உதவி செய்தவனே!’ என்று கூறிய வல்லுநர். அவனுடைய பேச்சிலேயே சமாரியன் என்னும் வார்த்தை வரவில்லை. அதைச் சொல்லவும் விரும்பாமல், அவனுக்கு உதவி செய்தவனே என்று பதிலளித்தார் அந்த சட்ட வல்லுநர்.
இயேசு அவனுடைய மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு புன்னகைத்தார்.
‘நீயும் போய் அவன் செய்தது போன்ற பணிகளைச் செய். அதுவே நிலை வாழ்வுக்கான வழி’.
நிலை வாழ்வுக்கான வழி மனித நேயம் நிரம்பிய வழி. சக மனிதனை அன்பு செய்யாமல், அவனுடைய தேவைகளுக்கு உதவாமல் செய்கின்ற மதம் சார்ந்த பணிகளில் எந்த விதமான பயனும் இல்லை.
கண்ணில் தெரியும் சகோதரனுக்கு அன்பு செய்யாமல், கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு யாரும் அன்பு செய்து விட முடியாது என்பதையே இந்த நிகழ்வு விளக்குகிறது.