ஆன்மிகம்

கொடு, பெற்றுக்கொள்வாய்

Published On 2016-09-23 09:03 IST   |   Update On 2016-09-23 09:03:00 IST
கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையே ‘கொடுத்தல்’ என்பதில் தான் அடங்கியிருக்கிறது.
சில சிறுவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘வளர்ந்து பெரியவனான பின்பு என்னவாக மாற வேண்டும்’ என்பது தான் விவாதத்தின் பொருள். ‘நான் மருத்துவராவேன், நான் என்ஜினீயராவேன், நான் தொழிலதிபராவேன்’ என ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஒரு சிறுவன் மட்டும், ‘நான் கொடைவள்ளலாக வேண்டும்’ என்றான்.

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையே ‘கொடுத்தல்’ என்பதில் தான் அடங்கியிருக்கிறது. இயேசு தனது ரத்தத்தைக் கொடுத்ததால் நாம் மீட்கப்பட்டிருக்கிறோம்.

‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்’ (யோவான் 3:16) என்கிறது பைபிள்.

கட்டாயத்தின் பெயராலோ, வேண்டா வெறுப்பாகவோ, முணுமுணுத்துக் கொண்டோ ஒருவருக்கு உதவி செய்வது கொடை அல்ல. அன்பான மனதோடு ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என சிந்தித்தாலே அது கொடை தான்.

‘கொடை’ என்பது கைகளில் தொடங்குவதல்ல, இதயத்தில் உருவாவது. கொடுத்தல் இன்றைக்கு சமூகத்தில் வளர்ந்திருக்கிறது. சில இடங்களில் கொடுத்தல் இல்லாமல் தேய்ந்து கொண்டே இருக்கிறது.

‘எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்; துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்’ என்கிறது (சங்கீதம் 41:1.)

கொடுத்தல் என்பது பகைமை பாராட்டாது, அது அன்பின் வெளிப்பாடு.

‘கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப் படும்’ என்கிறார் இயேசு. ஆனால் ‘நமக்குக் கிடைக்கும்’ எனும் சிந்தனையோடு கொடுப்பது தவறு. எதிர்பாராமல் கொடுப்பது தான் சரியான கொடுத்தல். காரணம் நாம் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டதையே திரும்பக் கொடுக்கிறோம்.

இழந்து கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அதாவது கொடுப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுமளவுக்கு கொடுக்க வேண்டும். மிகுதியாய் இருப்பதில் சிலதைக் கொடுப்பது நம்மை எந்த விதத்திலும் இழக்க வைக்காது. எவ்வளவு கொடுத்தோம் என்பதை அளவிட, எவ்வளவு நாம் வைத்திருக்கிறோம் என்பதைக் கணக்குப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

கொடுத்தல் குறித்து பைபிள் ஏராளமான விஷயங்களைச் சொல்கிறது. அவற்றில் மூன்று விஷயங்களை மட்டும் நாம் பார்ப்போம்.

வளமையானதைக் கொடுத்த ஆபிரகாம்

விவிலியம் நமக்கு பலரை அறிமுகம் செய்கிறது. ஆபிரகாம் வளமையானதை தனது சகோதரி மகன் லோத்துக்கு கொடுத்தார். கொடுக்க வேண்டிய சூழல் வந்தபோது அவர் நல்ல பங்கையெல்லாம் லோத்துக்கு கொடுத்து, கொடுப்பதன் முன்மாதிரியாய் மாறினார். காரணம், ‘தான் ஐஸ்வர்யவானானது கடவுளால் தான்’ என்பதை அவர் அறிந்திருந்தார்.

அப்படி ஆபிரகாம் கொடுத்த பின்பு தான் அவரது வாழ்க்கையில் ஆசீர்வாதங்கள் தொடர்ச்சியாக கிடைத்தன. கொடுப்பது இறை ஆசீர்வாதங்களின் தொடக்கம்.

வறுமையிலும் கொடுத்த மக்கதோனியா

வறுமையிலும் கொடுத்த மக்கதோனிய மக்களைப் பற்றி விவிலியம் குறிப்பிடு கிறது. ‘தாங்கள் வறுமையான நிலையில் இருந்தபோதும் அவர்கள் கொடுக்கும் மனநிலை கொண்டவர்களாக இருந்தார்கள்’ என்கிறார் பவுல்.

தங்களுடைய திராணிக்கு மிஞ்சி அவர்கள் கொடுத்தார்கள். காரணம், வறுமை என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்ற நிலையிலும் அவர்கள் பகிர்ந்தளித்தார்கள்.

வறுமையில் இருப்பவர்கள் தான் வறுமையை புரிந்து கொள்கின்றனர்.

விலை உயர்ந்ததைக் கொடுத்த பெண்மணி

நறுமணத் தைலம் ஒன்றை கொண்டு வந்த பெண்மணி இயேசுவின் பாதத்தில் அதை ஊற்றினாள். அவள் ஊற்றிய தைலத்தின் விலை, அவளுடைய ஒரு ஆண்டு கால உழைப்பின் பயன். அவள் ஆண்டவன் மீதிருந்த அன்பினால் அந்த உழைப்பின் பயன் முழுவதையும் கடவுளுக்கே கொடுத்தார்.

அளவிட முடியாத அன்பின் வெளிப்பாடாய் இயேசு பூமிக்கு வந்தார். அந்த விலைமதிப்பற்ற இறைவனுக்கு அந்தப் பெண் விலைமதிப்பற்ற ஒன்றை வழங்கு கிறார்.

இன்று நாம் எதையெல்லாம் கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

‘பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்’ (ஏசாயா 58:10) என்கிறது விவிலியம்.

பிறருக்குக் கொடுப்பவர்களை கடவுள் கைவிடுவதில்லை. அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றவும் கடவுள் தயங்குவதில்லை.

கொடுப்பதில் தாராளமாய் இருப்போம். அப்படிக் கொடுக்கும் போது நம்மிடமிருப்பதில் வளமையானதைக் கொடுப்போம். நாம் வறுமையில் இருந்தாலும் கொடுப்போம். அன்பின் வெளிப்பாடாய் விலை உயர்ந்ததைக் கொடுப்போம்.

கடவுளின் பேரன்பைப் புரிந்து கொள்ளும் நாம், கொடுப்பதை வாழ்வின் அடிப்படையாய் கொள்வோம். கொடுக்க வேண்டும் எனும் சிந்தையை முழுமையாய் பெற்றுக் கொள்வோம். இறை ஆசீர்வாதம் உங்களை நிரப்பட்டும்.

ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், வேளச்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், சென்னை. 

Similar News