ஆன்மிகம்

மேலப்பனைக்குளம் சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-08-20 09:06 IST   |   Update On 2016-08-20 09:06:00 IST
சி.சவேரியார்புரம் பங்கு மேலப்பனைக்குளம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சி.சவேரியார்புரம் பங்கு மேலப்பனைக்குளம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழமை வாய்ந்த இந்த ஆலயம் சோமநாதப்பேரி பங்கின் சிற்றலாயமாக முதலில் விளங்கியது. அதன் பின்பு 1963-ல் சிந்தாமணி புதிய பங்கு ஆலயமாக உருவெடுத்தது. 1976-ம் ஆண்டு புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 1978-ம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் அம்புரோஸ் ஆலயத்தை திறந்து வைத்தார்.

1999-ம் ஆண்டு சிந்தாமணி பங்கு பிரிக்கப்பட்டு சி. சவேரியார்புரம் பங்கு உதயமானது. அதில் இருந்து சி.சவேரியார்புரம் கிளை பங்காக விளங்கி வருகிறது. மேலப் பனைக்குளத்தில் கட்டப்பட்ட புதிய ஆலயத்தை 2013-ம் ஆண்டு பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் திறந்து வைத்தார்.

இந்த ஆயலத்தில் ஆண்டு தோறும் திருவிழா பங்கு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழா நாட்களில் திருப்பலி, நற்செய்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 26-ந் தேதி வெள்ளிக்கிழமை கத்தோலிக்க இன்னிசை நற்செய்தி பெருவிழா நடக்கிறது.

27-ந் தேதி இரவு புனிதரின் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது. 28-ந் தேதி மதியம் பொது அசன விருந்து நடக்கிறது. அன்று மாலையில் விளையாட்டுப் போட்டிகளும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டியான் மற்றும் மேலப்பனைக்குளம் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Similar News