ஆன்மிகம்

கல்லறைக் காவலர்கள்

Published On 2016-07-19 12:56 IST   |   Update On 2016-07-19 12:56:00 IST
இயேசு சிலுவையில் அறையப்பட்டார், உயிர் விட்டார். அரிமத்தியா ஊர் யோசேப்புவின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டார், உயிர் விட்டார். அரிமத்தியா ஊர் யோசேப்புவின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். கல்லறை வாசல் ஒரு மிகப் பெரிய கல்லினால் அடைக்கப்பட்டது.

இயேசுவின் மரணம் சீடர்களுக்கு அதிர்ச்சியாகவும், கலக்கமாகவும் இருந்த அதே நேரத்தில் மூப்பர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும், குருக்களுக்கும் கொண்டாட்டத்தின் நாளாக இருந்தது.

‘ஒருவழியாக மிகப்பெரிய தொல்லை இன்றுடன் தீர்ந்தது, இனிமேல் பிரச்சினையில்லை’.

‘அவன் பின்னால் சென்ற மனிதர்களையும் நாம் சும்மா விடக்கூடாது. அவர்களையும் நாம் ஏதாவது செய்ய வேண்டும்’.

‘அந்தக் கவலை நமக்கு வேண்டாம். அவனுடைய சீடர்கள் சாதாரணமானவர்கள். அவர்கள் இனிமேல் தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். மீன் பிடிக்கவோ, வரி வசூலிக்கவோ’

சிரிப்பொலிகள் அலைந்தன.

‘அது சரிதான்...’

‘நம்முடைய திட்டம் கனகச்சிதம். அதுவும் பரபாவையா?, இயேசுவையா? யாரை விடுதலை செய்யவேண்டும் என்று மன்னன் கேட்டபோது ஒரு வினாடி பயந்துவிட்டேன். எங்கே மக்கள் இயேசுவைக் கேட்பார்களோ என்று. நல்லவேளை நாம் கூட்டத்தைச் சரியாகக் கட்டுப்படுத்தி விட்டோம்’.

அவர்கள் ஆனந்தமாய் உரையாடிக் கொண்டிருந்தார்கள். தங்கள் முதுகை அழுத்திக்கொண்டிருந்த தேவையில்லாத ஒரு பாரம் இறங்கிப் போன நிம்மதி அவர்களிடம் தெரிந்தது.

‘ஏய்... எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது..’

‘என்ன?’

‘இயேசு உயிருடன் இருந்தபோது, மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவேன் என்று சொல்லியிருந்ததாய் ஞாபகம்’

‘அவனாவது உயிர்த்தெழுவதாவது... அதைப்பற்றி எல்லாம் ஏன் கவலைப்படுகிறாய்? அதெல்லாம் நடக்காது’.

‘நடக்காது என்பது தான் என் நம்பிக்கையும்... ஆனால்...’

‘என்ன ஆனால்...’

‘ஒருவேளை அந்த சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டு இயேசு உயிர்த்தார் என்று கதை கட்டலாம் அல்லவா?’

அவன் சொன்னதும் எல்லோரும் நிமிர்ந்தார்கள்.

‘அப்படி நடந்தால். அது மிகப்பெரிய எழுச்சியை மக்களிடையே உண்டாக்கிவிடும். இயேசு உண்மையிலேயே கடவுள் தான் என்று மக்கள் கூட்டம் நம்பி விடவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா?’

‘அட... ஆமாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் நாம் உடனே மன்னனிடம் போய், அந்தக் கல்லறையைக் காவல் காக்க ஏற்பாடு செய்யவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?’

‘கண்டிப்பாக...’

அவர்கள் நேராக பிலாத்துவிடம் ஓடினார்கள்.

‘மன்னா... இயேசுவைக் கொன்றது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால்...ஒரு விண்ணப்பம்...’

‘என்ன விண்ணப்பம்’ பிலாத்துவின் குரலில் எரிச்சல் தெரிந்தது.

இயேசு குற்றமில்லாதவர் என்றும், இந்தக் கூட்டத்தினரின் பொறாமை தான் அவரைக் கொன்றது என்றும் பிலாத்து அறிந்திருந்தான். எனவே அந்தக் கூட்டத்தினரைப் பார்ப்பதையே வெறுத்தான்.

முதலில் இயேசுவைக் கொல்லவேண்டும் என்று உயிரை வாங்கினார்கள். பின் யூதர்களின் அரசன் என்ற பெயர்ப் பலகைக்கு பிரச்சினை செய்தார்கள். இப்போது என்ன பிரச்சினையோடு வந்திருக்கிறார்கள்?

‘மன்னா.. அந்த இயேசு உயிரோடு இருந்தபோது, இறந்தாலும் மூன்றாவது நாளில் உயிர்ப்பேன் என்று சொல்லியிருந்தான்’

‘சரி.. அதற்கென்ன இப்போது? அவர் உயிர்த்தால் பார்த்துக் கொள்ளலாம்’

‘அதில்லை மன்னா. அவனுடைய சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்து எங்கேயாவது போட்டு விட்டு அவன் உயிர்த்து விட்டான் என்று கதை கட்டிவிடலாம் அல்லவா?’

‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை’ பிலாத்து கேட்டான்.

‘மன்னா.. இந்த மூன்று நாட்களும் அந்தக் கல்லறையைக் காவல் காக்கவேண்டும். மூன்று நாளில் உயிர்த்தெழுவேன் என்பது தான் அவனுடைய பேச்சு. எனவே மூன்று நாட்கள் மட்டும் காவலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே எங்கள் விண்ணப்பம்’

‘உங்களிடமே வீரர்கள் உண்டே. அவர்களைக் கொண்டு நீங்கள் காவல் புரியுங்கள். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்’ பிலாத்து எரிச்சல் குறையாமல் பேசினான்.

‘உங்கள் அனுமதிக்கு நன்றி அரசே’ கூட்டத்தினர் கலைந்தனர்.

உடனே சென்று படைவீரர்களை ஏற்பாடு செய்தனர்.

சில படைவீரர்கள் இயேசுவின் கல்லறைக்குச் சென்று அவருடைய உடல் கல்லறையில் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தினார்கள். பின் கல்லறையை மூடி அதை சங்கிலிகளால் பொருத்தி ‘சீல்’ வைத்தனர். படை வீரர்கள் அந்தக் கல்லறை வாசலில் கண் விழித்துக் காவல் இருந்தார்கள். அங்கே ஐம்பது படை வீரர்கள் வரை இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இயேசுவின் மரணத்தையும், உயிர்ப்பையும் அருகிருந்து தரிசிக்கும் பாக்கியத்தை அந்த வீரர்கள் பெற்றார்கள்.

Similar News