ஆன்மிகம்

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் - புதுச்சேரி

Published On 2016-07-13 11:36 IST   |   Update On 2016-07-13 11:36:00 IST
புதுவை மாநிலம், அரியாங்குப்பத்தில் இருக்கிறது, புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்.
புதுவை மாநிலம், அரியாங்குப்பத்தில் இருக்கிறது, புனித ஆரோக்கிய அன்னை ஆலயம். சிறிய வேளாங்கண்ணித் திருத்தலம் என்று அழைக்கப்படும் இக்கோயிலைச் சுற்றி சிலுவைப் பாதையின் 14 நிலைகளும் அழகான சிமென்ட் குடில்களில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.  

1690-ம் ஆண்டு ஃபிரெஞ்சு அரசின் அனுமதியுடன் கத்தோலிக்க சிரியர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம்தான் புதுச்சேரியில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் எனக் கூறப்படுகிறது. ஆலயத்துக்கு அப்போது ‘உற்பவி அன்னை ஆலயம்’ என்று பெயரிடப்பட்டது.

இத்தேவாலயம் உள்ளடக்கியிருக்கும் வரலாறுகள் ஏராளம். 1689-ம் ஆண்டு கத்தோலிக்க சிரியர்களால் ஏசு சபையினருக்கு இந்த ஆலயம் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தரங்கம்பாடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய டச்சுக்காரர்களால் ஃபிரெஞ்சு அரசுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்த ஆலயம் தாக்குதலுக்கு உள்ளானது. இப்படி பல தடவை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இப்படி பல போராட்டங்களையும் தாண்டிய இத்திருத்தலம், பின்னாட்களில் நடந்த புனரமைப்புப் பணிகளின்போது ஒட்டுமொத்தமாக இடிந்து விழ, கோபுரம் மட்டுமே எஞ்சியது. இக்கோபுரம் மட்டும்தான் வரலாற்றின் சாட்சியாக இன்றளவும் இத்திருத்தலத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. பழைமையான அந்தக் கோபுரத்தை இடிக்காமல் அதை மையமாகக்கொண்டு கட்டப்பட்ட ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

Similar News