ஆன்மிகம்

இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமந்தான் சீமோன்

Published On 2016-07-05 08:29 IST   |   Update On 2016-07-05 08:29:00 IST
ஆன்மிக வெளிச்சத்தில் சிலுவை சுமப்பது என்பது, நமது சுய விருப்பங்களை வெறுத்து, இறை விருப்பத்தை நிறைவேற்றுவது மட்டுமே.
இயேசுவுக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது. பாரமான சிலுவை ஒன்று வாங்கிவரப்பட்டது. அவமானச்சாவு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்களை அந்த சிலுவையில் கிடத்தி, கைகளை விரித்து மரத்தின் இரண்டு முனைகளிலும் வைத்து ஆணியால் அறைந்து, கால்களை கீழே இழுத்து இன்னொரு ஆணியால் அறைந்து தொங்க விடுவார்கள்.

பூமியிலும் ஆகாயத்திலும் இல்லாமல் வருவோர் போவோரெல்லாம் பார்க்கும் விதமாக மலையில் அவர்களை சிலுவையில் சாகும் வரைத் தொங்க விடுவார்கள்.

சிலுவைச் சாவு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ, அவர்கள் தாங்களாகவே அந்த சிலுவையை தோளில் சுமந்து கொண்டு தங்கள் மரணம் நிகழப்போகும் இடம் வரை தூக்கிக்கொண்டு வரவேண்டும். ஒரு கொடுமையான சாவு. சாவு பற்றிய பயம் ஒருபுறம், அவமானம் ஒரு புறம், வலி ஒருபுறம் என சிலுவைச் சாவுக்குற்றவாளிகள் படும் அவஸ்தை விவரிக்கக் கூடியதல்ல.

சிலுவையில் தொங்கவிட்டபின் மாலை வரை சிலுவையிலேயே தொங்கியும் முழுமையாய் இறக்காத மனிதர்களும் இருப்பார்கள். படைவீரர்கள் வந்து அவர்களுடைய கால்களை வெட்டி எறிவார்கள்.

இயேசுவை கொல்கொதா என்று அழைக்கப்பட்ட மலையை நோக்கி நடக்க வைத்தார்கள். நடக்கவே வலுவில்லாத குற்றுயிரான நிலையில் இயேசு பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு மலையை நோக்கி நடந்தார்.

இயேசுவால் நடக்க முடியவில்லை. தடுமாறி விழுந்தார்.

படைவீரர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த சாட்டையால் அவரை அடித்து எழுப்பினார்கள்.

இயேசு அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே வந்தார்.

இயேசுவின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட பாமர மக்கள் அவருக்காகக் கண்ணீர் விட்டார்கள்.

அவர்களால் நம்ப முடியவில்லை. நேற்று வரை எல்லோருக்கும் பார்வை கொடுத்துக் கொண்டிருந்தவர், தொழுநோயாளிகளைக் குணமாக்கிக் கொண்டிருந்தவர், ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தவர், சிங்கம் போல சீடர்களுடன் உலா வந்து கொண்டிருந்தவர் இன்று என்ன ஆயிற்று. அது இயேசு தானா அல்லது வேறு யாரோவா? தண்ணீரில் கூட தடுமாறாமல் நடந்தவர், தரையில் நடக்க முடியாமல் தடுமாறுகிறாரே! மக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள்

இருபுறமும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

‘எருசலேம் மகளிரே... எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ இயேசு சொன்னார்.

இயேசுவின் பார்வை கூட்டத்தில் ஒரு முகத்தில் பதிந்தது.

அவருடைய தாயார்!

எந்த ஒரு தாயால் தன் மகனை இந்த கோலத்தில் பார்க்க முடியும்? காலில் கல் இடித்து விட்டாலே கலங்கிப் போகும் தாய்மை மரணத்தைத் தோளிலேற்றி மகன் செல்வதை கண்டு கரையாமல் இருக்க முடியுமா?

அந்தப் பார்வையைத் தாங்க முடியாத இயேசு தடுமாறித் தரையில் விழுந்தார். மீண்டும் எழுந்தார். தொடர்ந்து நடந்தார். இயேசுவால் நடக்க முடியவில்லை.  

இயேசு மூன்றாவது முறையாகக் கீழே விழுந்தார். இனிமேல் எழும்புவதற்கு உடம்பில் வலு இல்லை.

‘இவனால் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது, என்ன செய்யலாம்?’

‘யாரையாவது பிடித்து சிலுவையைச் சுமக்கச் செய்வோம், இல்லையேல் இவன் மலையை அடையும் முன் மரணத்தை அடைந்துவிடுவான்’.

படைவீரர்கள் பேசிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அவர்களுடைய கண்களுக்குத் தட்டுப்பட்டார் திடகாத்திரமான ஒருவர்.

‘ஏய்... நீ யார்...’

‘நான் சீமோன். சீரேன் ஊரைச் சேர்ந்தவன். எனக்கு இந்த மனிதனைத் தெரியாது... நான் ஒன்றும் அறியாதவன்’ அவன் பயந்து நடுங்கினான்.

‘எங்கிருந்து வருகிறாய்?’

‘வயலில் வேலை செய்துவிட்டு வருகிறேன்’

‘சரி... சரி... வந்து இவனுடைய சிலுவையைச் சுமந்து கொண்டு வா...’

‘ஐயா... என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது அழையுங்கள்’ சீமோன் நழுவப் பார்த்தார்.

சிலுவையில் அறையப்படுபவர்கள் தான் சிலுவையைத் தூக்கிச் செல்வார்கள். தான் சிலுவையைத் தூக்கிச் சென்றால் அந்த அவமானம் தனக்கும் வருமே என்று பயந்தாரோ அல்லது தான் இயேசுவின் மறைமுக ஆதரவாளர் என்பதை படை வீரர்கள் அறிந்து கொண்டார்களோ என்ற பயமோ சீமோனை நழுவச்சொன்னது.

அவர்கள் விடவில்லை. அவரைக் கட்டாயப்படுத்தி சிலுவையைச் சுமக்க வைத்தார்கள். இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமந்தான் சீமோன்!.

பைபிளில் ஒரே ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டு, இயேசுவின் சிலுவையை சுமக்கும் பாக்கியத்தையும், அதன் மூலம் காலம் உள்ளவரை மக்களால் நினைவுகூரப்படக் கூடிய பாக்கியத்தையும் பெற்றார் இந்த சீரேன் சீமோன்.

இயேசுவுக்காக சிலுவை சுமக்கத் தயாரா? ஆன்மிக வெளிச்சத்தில் சிலுவை சுமப்பது என்பது, நமது சுய விருப்பங்களை வெறுத்து, இறை விருப்பத்தை நிறைவேற்றுவது மட்டுமே.

Similar News