ஆன்மிகம்

மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்

Published On 2016-06-29 10:40 IST   |   Update On 2016-06-29 10:40:00 IST
மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள் என்னவென்று பார்க்கலாம்.
1. வாழுங்கள், வாழ அனுமதியுங்கள்: நிம்மதியும், சந்தோஷமும்தான் வாழ்க்கையின் முதல் படி. வாழவேண்டும், மற்றவர்களை வாழ அனுமதிக்கவும் வேண்டும்.

2. உதவுங்கள்: உங்களுடைய பணத்தையும், நேரத்தையும் தேவைப்படுகிறவர்களுக்காக செலவிடுங்கள். தேங்கிக்கிடக்கும் நீரைப்போன்று பணமும், நேரமும் அமைந்துவிடக்கூடாது. நம்மிடம் இருப்பதை எல்லாம் மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும்.

3. அமைதி தவழட்டும்: பிரபல எழுத்தாளர் ஒருவர் சொன்னதுபோல், இளம் வயது ஆர்ப்பரிக்கும் அருவி போன்றது. முதுமைப் பருவம் அமைதியாக தவழ்ந்து செல்லும் நதியை போன்று மாறும். அதுபோல் அமைதியாகவும், நிதானமாகவும் வாழ்பவராகுக.

4. ஓய்வில் மகிழ்ச்சி: பொருள்சார்ந்த கலாசாரம் தாங்க முடியாத மனஅழுத்தத்தையும் கொண்டு வருகிறது. அதனால் உங்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட்டு விளையாடுங்கள். குழந்தைகளுக்கு செலவிட வேண்டியது பணமல்ல, நேரம்.

5. ஞாயிற்றுக்கிழமை குடும்பத்திற்கு: வாரத்தில் ஒருநாள் முழுவதும் தியானம், ஆராதனை, குடும்பவாழ்க்கை போன்றவைகளோடு, வாழ்க்கைக்கு தேவையான காரியங்களையும் மேற்கொள்ளவேண்டும். அதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை.

6. இளைஞர்களுக்கு வேலை: போதைப் பொருள் உபயோகமும், தற்கொலையும் 25 வயதுக்கு கீழ் உள்ள வேலையில்லாத இளைஞர்களிடம்தான் அதிகம் இருக்கிறது. அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க நாம் எல்லாம் உதவ வேண்டும்.

7. இயற்கைக்கு மரியாதை: காற்றில் மாசு கலக்காத, நதிகளை விஷமாக்காத, காடுகளை அழிக்காத வாழ்க்கை வாழவேண்டும். நம்மை சுற்றி பல்வேறுவிதமான நெருக்கடிகள் உருவாக, இயற்கையை நாம் மாசுபடுத்துவதுதான் காரணம்.

8. தேவையற்றதில் இருந்து ஒதுங்குங்கள்: நம்மை கோபப்படுத்துகிறவர்கள் மீது புகார் செய்ய வேண்டியதில்லை. அவர்களிடம் இருந்து விலகிவிடுவதே சிறந்தது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் பழைய கழிவுப் பொருட்களை நமது பாதை எங்கும் வீசி எறிகிறது. அந்த கழிவுகளை கழுவிவிடவேண்டும்.

9. மதத்தை திணிக்கவேண்டாம்: நமது மதத்தை பற்றி சத்தமாக குரல் எழுப்ப வேண்டாம். மதத்திற்கு விரும்பி வருகிறவர்கள் வரட்டும். வாதபிரதிவாதங்கள் நடத்தி வரவேண்டியதில்லை.

10. தேவை சமாதானம்: பத்து விஷயங்களும் நமது சந்தோஷத்திற்கும், சமாதானத்திற்குமானவை. சமாதானம்தான் நாம் பேசவேண்டிய மொழி.

Similar News