ஆன்மிகம்

புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-06-21 09:48 IST   |   Update On 2016-06-21 09:48:00 IST
ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெய்வேலி அருகே ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை குழந்தை ஏசு ஆலய பங்கு தந்தை லாசர் சவரிமுத்து, கூனங்குறிச்சி பெரியநாயகி அன்னை மாதா ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோரின் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், தேர் பவனியும் நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை 6 மணிக்கு பெரியாகுறிச்சி ஆலய பங்கு தந்தை லாரன்ஸ், கூனங்குறிச்சி ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் நவநாள் திருப்பலி ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கடலூர் ஆக்னஸ் குரு மடம் அதிபர் ரொசாரியோ, புனித பால் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் நிர்மல்ராஜ், கும்பகோணம் பங்கு தந்தை ரெஜிஸ், முகையூர் உதவி பங்கு தந்தை ஆரோக்கிய ஜான் ராபர்ட், கூனங்குறிச்சி பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோரின் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியாரின் ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.

இந்த பவனியானது புனித அந்தோணியார் ஆலயத்தில் தொடங்கி கடலூர் மெயின்ரோடு வழியாக நெய்வேலி மேம்பாலம் வரை சென்று திரும்பி ஆலயத்தை வந்தடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை கிறிஸ்துராஜ், வேதியர் தேவராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Similar News