ஆன்மிகம்

லூக்கா மற்றும் மத்தேயு பதிகின்ற இயேசுவின் சோதனை பாடம்

Published On 2016-06-03 10:58 IST   |   Update On 2016-06-03 10:58:00 IST
லூக்கா மற்றும் மத்தேயு இயேசுவின் சோதனை பற்றி எடுத்துக் கூறும் பகுதிகள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.
லூக்கா மற்றும் மத்தேயு இயேசுவின் சோதனை பற்றி எடுத்துக் கூறும் பகுதிகள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் வேற்றுமைகளையும் கொண்டுள்ளன. இரண்டு பாடங்களிலும் சோதனைகளை வரிசைப்படுத்தும் முறை வேறுபடுகிறது.

இயேசு நாற்பது நாள் நோன்பிருந்த வேளையில் சோதிக்கப்பட்டதாக லூக்காவும், நாற்பது நாள் நோன்பிருந்த பிறகு சோதிக்கப்பட்டதாக மத்தேயுவும் கூறுகின்றனர். மாற்கு, லூக்கா, மத்தேயு ஆகிய மூவரும், இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்துக்குத் “தூய ஆவியால்” அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்.

எந்தெந்த சோதனைகளை இயேசு சந்தித்தார் என்று மாற்கு கூறவில்லை. மாறாக, மத்தேயுவும் லூக்காவும் அந்த சோதனைகள் யாவை என்று கூறுகின்றனர்:

* பசியுற்றிருந்த இயேசு கற்களை அப்பமாக மாற்றித் தம் பசியைத் தீர்த்துக்கொள்ளலாமே என்ற சோதனை;

* அலகை இயேசுவை எருசலேம் கோவிலின் உயர்ந்த பகுதிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து கீழே குதிக்குமாறும், அவ்வாறு செய்தால் அவர் கீழே விழுந்துவிடாமல் தம் தூதர்களை அனுப்பிக் கடவுள் காத்துக்கொள்வார் என்று விவிலியம் கூறுவதாகவும் எடுத்துச் சொல்லி, இயேசுவை சோதிக்கிறது.

இங்கே அலகை திருப்பாடல்கள் 91:11-12 பகுதியை மேற்கோள் காட்டுகிறது. அப்பகுதி உண்மையில் கடவுள் தம்மை நம்புவோரை எப்போதுமே பாதுகாப்பார் என்று மட்டுமே கூறுகிறது. ஆனால் அலகையோ, கடவுளின் வல்லமையை வேண்டுமென்றே சோதிக்கும்படி இயேசுவைத் தூண்டுகிறது;

* அலகை இயேசுவை ஓர் உயர்ந்த மலைக்கு இட்டுச் சென்று, உலக அரசுகளைக் காட்டி, இயேசு தன்னை விழுந்து வணங்கினால் அவற்றை அவருக்குக் கொடுப்பதாகக் கூறி சோதிக்கிறது.

Similar News