ஆன்மிகம்

பைபிளில் வரும் அரிமத்தியா ஊர் யோசேப்பு

Published On 2016-05-24 10:42 IST   |   Update On 2016-05-24 10:42:00 IST
பைபிளில் வரும் அரிமத்தியா ஊர் யோசேப்பு எனும் நபர் மிகவும் வித்தியாசமானவர்.
பைபிளில் வரும் அரிமத்தியா ஊர் யோசேப்பு எனும் நபர் மிகவும் வித்தியாசமானவர். இயேசுவின் வாழ்க்கையை பைபிளில் மத்தேயு, மார்கு, லூக்கா, யோவான் என நான்கு நற்செய்தியாளர்கள் விளக்குகின்றனர். நான்கு பேருமே யோசேப்பு குறித்து பதிவு செய்கின்றனர்.

நால்வருமே இயேசுவின் மரணத்துக்குப் பின்பு யோசேப்புவை அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரு சில காட்சிகளுக்குப் பின் யோசேப்பு காணாமல் போய்விடுகிறார்.

இயேசுவைப் பிடித்து சிலுவைச் சாவு கொடுத்து, அடித்து சித்திரவதை செய்து சிலுவையில் அறைந் தாயிற்று. மதியம் மூன்று மணியளவில் இயேசு தனது உயிரை விண்ணகத் தந்தையிடம் ஒப்படைத்தார்.

மறுநாள் ஓய்வு நாள். யூதர்களின் கணக்குப்படி ஆறுமணியோடு அன்றைய தினம் முடிவடையும். இயேசு இறந்து போய் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக் கிறார். யாரேனும் அவரை அடக்கம் செய்தாக வேண்டும். இன்னும் மூன்று மணி நேரத்தில் அடக்கம் செய்யப்படாவிட்டால் மறு நாள் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இயேசுவின் சீடர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள். இயேசு இறந்து போவார் என எதிர்பார்க்காத அவருடைய ஆதரவாளர்கள் எல்லோரும் தலைமறைவாகி விட்டார்கள்.

வெளிப்படையாய் சுற்றித்திரிந்தவர்கள் தலைமறைவான போது, தலைமறைவாய் இருந்த யோசேப்பு வெளியே வந்தார். அவர் துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர். ‘இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்’ என்கிறது பைபிள்.

சிலுவையில் அறையப்பட்டவர்கள் அவ்வளவு விரைவாக இறந்து விடுவதில்லை. இயேசு ஆறு மணி நேரங்களில் இறந்து விட்டார். சிலர் சிலுவையில் சில நாட்கள் கூட தொங்குவதுண்டு.

எனவே இயேசு இவ்வளவு விரைவாய் இறந்து போனது பிலாத்துவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. உடனே ஒரு நூற்றுவர் தலைவனை அழைத்து இயேசுவின் மரணத்தை உறுதி செய்தார். கொல்கொதா அரண்மனையிலிருந்து வெறும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தான் இருந்தது. இயேசுவின் மரணம் உறுதியானபின் பிலாத்து யோசேப்புக்கு அனுமதி அளித்தார்.

அப்போது யோசேப்புடன் கை கோர்த்தார் இன்னொருவர். அவர் நிக்கதேம். அவரும் ரகசிய சீடர். இருவருமே சனதரீம் எனும் தலைமைச் சங்க உறுப்பினர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்களாய் இருந்திருப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

இயேசுவின் மரணம் எந்த நேரத்தில் நிகழும் என்பதை அவர்கள் அறிந்திருந்தது போல இருந்தன அவர்களுடைய செயல்கள். ஒருவேளை இயேசுவே தனது மரண நேரத்தைக் குறித்து அவர்களிடம் தெரிவித்திருக்கலாம் என விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வெறும் மூன்று மணி நேரத்துக்குள், ரோம முறைப்படி கொலை செய்யப்பட்ட இயேசுவை, யூத முறைப்படி இவர்கள் அடக்கம் செய்கின்றனர்.

யோசேப்பு மெல்லிய துணியைக் கொண்டு வரு கிறார், நிக்கதேம் வாசனைப் பொருட்களை கொண்டு வருகிறார். இருவருமே செல்வந்தர்கள் என்கிறது பைபிள்.

நூறு ராத்தல் எடையுள்ள வெள்ளைப்போளத்தைக் கரிய போளத்துடன் கலந்து வாசனைப் பொருளாக்க குறைந்த பட்சம் ஐந்து மணி நேரமாகலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அப்படியானால் அந்தப் பொருட்கள் நிக்கதேமுவால் ஏற்கனவே தயாராக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அடக்கம் செய்யப்பட வேண்டிய குகை தயாராக இருந்தது. அது யோசேப்பு தமக்கென தயாராக்கி வைத்திருந்த புத்தம் புது கல்லறை. அரிமத்தியா ஊர் யோசேப்பு ஏன் இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எருசலேமில் தனக்கான கல்லறை வாங்கினார் என்பது வியப்பானது. அது இறைவனின் மாபெரும் திட்டம் என்பதைத் தவிர வேறில்லை.

இயேசு வாழ்ந்த காலத்தில் ரகசிய வாழ்வு வாழ்ந்த யோசேப்பு, இயேசுவின் மரணத்தோடு வலிமை பெற்று வெளியே வருகிறார். தான் இயேசுவின் சீடர் என்பது தெரிந்தால் தனது பதவி பறி போய்விடலாம், சொத்து பறிமுதல் செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம், தேவாலயத்தில் நுழையும் அனுமதி கூட மறுக்கப்படலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் யோசேப்பு அதைப்பற்றிஎல்லாம் கவலைப்படவில்லை. அது இயேசுவின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத விசுவாசத்தை எடுத்துக் காட்டுகிறது.

இயேசுவோடு இருந்தவர்கள் எல்லோரும் ஓடிவிட, ஓடி ஒளிந்திருந்தவர் இத்தனை தைரியமாய் வெளியே வருகிறார் எனில் இயேசு அவரிடம் தனது மரணத்தைக் குறித்தும், அடக்கம் குறித்தும் தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர்.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கையில் அவரது ரத்தம் தரையில் விழாமல் யோசேப்பு ஒரு பாத்திரத்தில் பிடித்ததாகவும், அந்தப் பாத்திரம் அவரோடு கடைசி வரை இருந்ததாகவும், யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அப்போது அந்தப் பாத்திரம் அமுத சுரபி போல் அவருக்கு அதிசயமாய் உணவு வழங்கியதாகவும் ‘நிக்கதேமின் நற்செய்தி’ எனும் மரபு நூல் தெரிவிக்கிறது.

யோசேப்பின் வாழ்க்கை நமக்கு துணிச்சல் கலந்த விசுவாசத்தின் தேவையை நமக்கு விளக்குகிறது. 

Similar News