ஆன்மிகம்
அருமனையில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடந்த கலாசார ஊர்வலத்தில் பங்கேற்ற குழுவினரை படத்தில் காணலாம்.

கிறிஸ்துமஸ் கலாசார ஊர்வலம்: 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு

Published On 2018-12-24 03:18 GMT   |   Update On 2018-12-24 03:18 GMT
அருமனையில் கிறிஸ்துமஸ் கலாசார ஊர்வலம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
அருமனையில் 21-வது கிறிஸ்துமஸ் விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நேற்று வரை 5 நாட்கள் நடந்தது. 19-ந்தேதி மாநில அளவில் இறகு பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. 22-ந்தேதி மாலையில் நடந்த விழாவில் திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார்.

கிறிஸ்துமஸ் கலாசார ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் சிங்காரி மேளம் உள்பட 60-க்கும் மேற்பட்ட கலைக்குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். புண்ணியம் சந்திப்பில் இருந்து புறப்பட்ட கலாசார ஊர்வலம், சிறப்பு விருந்தினர்களுடன் நெடியசாலை, பனிச்சவிளை, அருமனை சந்திப்பு, நெடுங்குளம் சந்திப்பு வழியாக மேலத்தெருவில் உள்ள விழா மேடையை அடைந்தது. முன்னதாக அங்கு பாடல் போட்டிகள் நடந்தது.

கிறிஸ்துமஸ் விழா மாநாடு இரவு நடைபெற்றது. இதற்கு அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். தலைவர் டென்னிஸ், பொருளாளர் கென்னத், துணை தலைவர் ஜோஸ் செல்வன், இணை செயலாளர் சி.டி.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பென்சாம் வரவேற்றார்.

இதில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அருமனை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக விழாவுக்கு வந்த டி.டி.வி. தினகரனுக்கு குமாரகோவில் சந்திப்பில் ஜெங்கின்ஸ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
Tags:    

Similar News