ஆன்மிகம்
கோவை ராமநாதபுரம் உயிர்த்த ஆண்டவர் ஆலய தேர் பவனி நடந்தபோது எடுத்தபடம்.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள உயிர்த்த ஆண்டவர் ஆலய தேர் பவனி

Published On 2017-04-24 11:26 IST   |   Update On 2017-04-24 11:26:00 IST
கோவை ராமநாதபுரத்தில் உள்ள உயிர்த்த ஆண்டவர் ஆலய தேர் பவனி நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை ராமநாதபுரத்தில் உயிர்த்த ஆண்டவர் ஆலயம் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த ஆலயத்துக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.

இந்த ஆலய தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்து வந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக நேற்று காலையில் கோவை மறைமாவட்ட ஆயர் எல்.தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து புதுநன்மை, உறுதி பூசுதல் மற்றும் சிறப்பு காணிக்கை பவனியும் நடந்தது.

பின்னர் இரவில் தேர் பவனி நடந்தது. இதில் தேர் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

தேர் பவனியை திருப்பூர் பிஷப் உபகாரசாமி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹென்றி டேனியல் தொடங்கி வைத்தார்.

ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர், பாரதி நகர் 6-வது வீதி, வ.உ.சி. நகர், சர்ச் தெரு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்து அடைந்தது. பின்னர் நற்கருணை ஆசீர்வாதத்துடன் விழா முடிந்தது.

இதில் ஆலய பங்குகுரு கனகராஜ், பங்குபேரவை துணை தலைவர் பீட்டர், செயலாளர் சேவியர் ராஜன் மற்றும் எல்.ஜோ, கே.ஆர்.தாமஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Similar News