ஆன்மிகம்

புனித மரியகோல்பேயின் அழியாத உடல் உறுப்புடன் கிறிஸ்தவர்கள் பவனி

Published On 2017-04-03 11:55 IST   |   Update On 2017-04-03 11:55:00 IST
ரோம் நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மரியகோல்பேயின் அழியாத உடல் உறுப்புடன் கிறிஸ்தவர்கள் பவனி சென்றனர். பின்னர் அந்த உடல் உறுப்பு கோவை அருகே உள்ள விசுவாசபுரம் ஆலயத்தில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
போலந்து நாட்டை சேர்ந்தவர் புனித மேக்சி மில்லியன் மரியகோல்பே. இவர் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து கடந்த 1918-ம் ஆண்டு குருவானார். இறைப்பணிகளை செய்து வந்த அவர் 2-ம் உலகப்போரின்போது கைதியாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அந்த சிறையில் இருந்த சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை பெற்றதில் ஒருவருக்கு பல குழந்தைகள் இருந்ததால், அவர் தனது குடும்பத்தை நினைத்து மிகவும் வருந்தினார். இதனை அறிந்த மரியகோல்பே அந்த கைதிக்கு பதிலாக மரண தண்டனையை தான் ஏற்று கடந்த 1941-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி உயிரை விட்டார். இதன் காரணமாக அவர் சிறைப்பணியாளர்களின் பாதுகாவலர் என்று போற்றப்படுகிறார்.

இவருடைய இறப்பிற்கு பின்னர் அவரால் பல்வேறு புதுமைகள் நிகழ்ந்தன. இதனால் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விசுவாசபுரத்தில்தான் அவருடைய பெயரில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் உள்ளது.

கிறிஸ்தவ மதத்தில் உள்ள சில புனிதர்களின் மறைவுக்கு பிறகும், அவர்களது உடலின் ஏதாவது ஒரு பாகம் அழியாமல் இன்னும் இருக்கிறது. புனித மேக்சி மில்லியன் மரியகோல்பே இறப்புக்கு பின்னர் அவருடைய உடலில் அழியாமல் உள்ள சில உறுப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

புனித பொருளாக கருதப்படும் அந்த உடல் உறுப்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான ரோமில் உள்ள வாடிகன் நகரில் இருந்து விசுவாசபுரம் ஆலயத்துக்கு வழங்கப்பட்டது. இந்த உடல் உறுப்பு நேற்று ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதை ஆலயத்தில் வழிபாட்டுக்காக நிரந்தரமாக வைக்கும் நிகழ்ச்சி சிறப்பு திருப்பலியுடன் நேற்று மாலையில் நடந்தது.

இதில் ஆலய பங்குகுரு ஜோசப் பங்கிராஸ், மதுக்கரை ஆலய பங்குகுரு விக்டர் சந்தியாகு, கப்புச்சின் சபை குருவானவர் ஜோக்கிம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். திருப்பலி முடிந்த பின்னர் அந்த அழியாத உடல் உறுப்பை ஒரு பேழைக்குள் வைத்து, அதை எடுத்துக்கொண்டு குருவானவர்கள் தலைமையில், கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.

பின்னர் பவனி முடிந்ததும் அவருடைய அழியாத உடல் உறுப்பு இருக்கும் பேழை, ஆலயத்தின் உட்பகுதியில் வழிபாட்டுக்காக நிரந்தரமாக வைக்கப்பட்டது. பின்னர் அந்த உடல் உறுப்பை ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். தொடர்ந்து அதை பலர் வழிபட்டு வருகிறார்கள்.

Similar News