ஆன்மிகம்
புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு கிறிஸ்தவர்கள் தவக்கால புனித பாதயாத்திரை சென்றபோது எடுத்த படம்.

திருவண்ணாமலையில் இருந்து காட்டுக்கோவில் புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு தவக்கால பாதயாத்திரை

Published On 2017-03-27 11:25 IST   |   Update On 2017-03-27 11:25:00 IST
திருவண்ணாமலையில் இருந்து விருது விளங்கினான் காட்டுக்கோவில் புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு திரளான கிறிஸ்தவர்கள் தவக்கால புனித பாதயாத்திரை சென்றனர்.
கிறிஸ்தவர்களின் முக்கிய தினங்களில் ஒன்றான புனித வெள்ளி வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பாக 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கிறார்கள்.

இதையொட்டி ஆண்டு தோறும் திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் விருதுவிளங்கினான் காட்டுக்கோவில் புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு தவக்கால புனித பாதயாத்திரை செல்வது வழக்கம்.

அதன்படி, திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள உலகமாதா தேவாலயத்தில் இருந்து அருட்தந்தை ஞானஜோதி தலைமையில், 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விருது விளங்கினான் காட்டுக்கோவில் புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு தவக்கால புனித பாதயாத்திரை தொடங்கியது.

திருக்கோவிலூர் சாலை வழியாக விருது விளங்கினான் காட்டுக்கோவிலுக்கு புனித பாதயாத்திரை சென்றனர். அப்போது பவித்திரம், கல்லேரி, அல்லிகொண்டாப்பட்டு, தலையாம்பள்ளம், பெருமணம், வன்னியநகரம், அத்திப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் புனித பாதயாத்திரையில் பங்கேற்றனர்.

புனித பாதயாத்திரையின் போது திருப்பலி பாடல்களை பாடியபடி திரளான கிறிஸ்தவர்கள் நடந்து சென்றனர். அதைத் தொடர்ந்து விருது விளங்கினான் காட்டுக்கோவில் புனித அந்தோணியார் தேவாலயத்தில் கூட்டுத்திருப்பலி நடந்தது.

இதில் வேலூர் மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ராபர்ட், அந்தோணிசாமி, திருத்தல அதிபர் அருட்தந்தை டேனியல், ஜீவகன், தாளாளர் யேசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News