ஆன்மிகம்
இளையாங்கன்னி தேவாலயத்தில் நடந்த சாம்பல் புதனை முன்னிட்டு ஒருவருக்கு சாம்பலில் சிலுவை போடப்பட்டதை காணலாம்.

சாம்பல் புதனை முன்னிட்டு இளையாங்கன்னி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2017-03-02 09:58 IST   |   Update On 2017-03-02 09:58:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் டிசம்பர் 25-ந் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த (உயிரிழந்த) நாளை புனித வெள்ளியாக அனுஷ்டித்து அதன்பின்னர் 3 நாட்கள் கழித்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்று குறிப்பிடுவார்கள். 40 நாட்கள் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் உபவாச நிலையை கடைப்பிடிப்பாார்கள். இத்தகைய தவக்காலத்தின் முதல்நாள் சாம்பல் புதனாக அழைக்கப்படும். அதன்படி தவக்காலத்தின் முதல்நாளான நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இளையாங்கன்னி புனித கார்மேல் அன்னை தேவாலயத்தில் நேற்று காலை 6 மணியளவில் பங்கு தந்தை ஜெயசீலன், அருள் தந்தை பால்வேளாங்கன்னி ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதில் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக கொண்டு சென்ற ஓலைகளை எரித்து அந்த சாம்பலை பங்கு தந்தை ஜெயசீலன் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவையாக பூசிவிட்டார். அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெருந்துறைப்பட்டு காணிக்கை அன்னை தேவாலயம், தென்கரும்பலூர், சோவூர், அள்ளிகொண்டாப்பட்டு, கல்லேரி, தளையாம்பள்ளம், அந்தோனியார்புரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்பு பிராாத்தனை நடை பெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

போளூர் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை உலக மாதா தேவாலயம், கர்மேல் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News