ஆன்மிகம்

பூண்டி மாதா பேராலயத்தில் புனித கன்னிமரியாள் அலங்கார தேர்பவனி

Published On 2016-09-09 14:59 IST   |   Update On 2016-09-09 14:59:00 IST
பூண்டி மாதா பேராலயத்தில் புனித கன்னிமரியாள் பிறப்பு பெருவிழா அலங்கார தேர்பவனி நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தின் புனித கன்னிமரியாள் பிறப்பு பெருவிழா கடந்த ஆகஸ்ட் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில் தினமும் மாலை சிறுசப்பர பவனியும், திருப்பலி நிறைவேற்றலும் நடைபெற்றது. இதில் பல்வேறு நகரங்களில் இருந்து அருட்தந்தையர்கள் ஆரோக்கியபாஸ்கர், தியோபிலஸ், மரியஇஞ்ஞாசி, கிறிஸ்துராஜ், விஜய்அமல்ராஜ், ஐசக்ராஜ். டேவிட்தனராஜ், சூசை ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.

விழாவின் சிறப்பு நாளாகவும் புனித கன்னி மரியாள் பிறப்பு நாளாகவும் கருதப்படும் நேற்று மாலை மரியாள் -விசுவாசித்துபேறு பெற்றவர் என்ற தலைப்பில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமை யில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் சூசை, சதீஸ்ஏசுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பலி நிறைவேற்றப் பட்ட பேராலய முகப்பில் மல்லிகை மலர், மின்விளக்கு களால் அலங்காரம் செய்யப்பட்ட பெரியதேரில் புனிதகன்னி மரியாள் சொரூபம் வைக்கப்பட்டது. அதிர்வேட்டுகள் முழங்கிட ஆலய மணிகள் ஒலித்திட புனிதகன்னி மரியாளின் தேர்பவனியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து துவக்கி வைத்தார்.

பக்தர்கள் மரியே வாழ்க என்ற முழக்கத்துடன் தேர் இழுத்தனர். தேர்பவனி நிறைவடைந்ததும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருவிழா சிறப்பு திருப்பலியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி மரியாள்- நம்பிக்கையாளர்களின் அரசி என்ற தலைப்பில் நிறைவேற்றினார். இதில் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, பேராலய அதிபர், துணை அதிபர், தியான மைய இயக்குநர் மற்றும் பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர். இத்துடன் பூண்டி மாதா பேராலயத்தின் புனித கன்னிமரியாள் பிறப்பு பெருவிழா நிறைவு பெற்றது.

விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர் களுக்கான வசதிகளை பேராலய நிர்வாகம் செய்திருந்தது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.

Similar News