ஆன்மிகம்

காமநாயக்கன்பட்டி பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா தேர்பவனி

Published On 2016-08-17 14:17 IST   |   Update On 2016-08-17 14:17:00 IST
காமநாயக்கன்பட்டி பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.





கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன் பட்டியில் புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேம்பாவணி என்ற காவியம் எழுதிய வீரமாமுனிவர் 7-வது பங்கு தந்தையாக பணியாற்றியுள்ளார். மேலும் இந்த ஆலயத்தில் உள்ள மாதா சொரூபம் போர்ச்சுகல் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்டது.

சிறப்புமிக்க இந்த ஆலயத்தினை கோவில்பட்டி மட்டுமல்லாது தென் மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து வணங்கிவருகின்றனர். இந்த ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா கடந்த 6- ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விண்ணேற்பு பெருவிழா தேர் பவனி அதிகாலையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ், வாராணாசி மறை மாவட்ட பங்குத்தந்தை யூஜின்ஜோசப் ஆகியோர் தலைமையில் தேரடித் திருப்பலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நற்கருணை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதன் பின்னர் வாண வேடிக்கையுடன் புனித பரலோகமாதா தேர்பவனி நடைபெற்றது.

பின்னர் மக்கள் தாங்கள் கொண்டு வந்த மலர்கள், உப்பு போன்றவற்றை கொண்டு வந்து வணங்கினர். மேலும் பக்தர்கள் தங்கள் நேர்ச்சையான கும்பிடு சேவையை நிறைவேற்றினர். இந்த விழாவினை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான மக்கள் வந்து இருந்தனர்.

பக்தர்களின் வசதிக்காக கோவில்பட்டியில் இருந்து விடிய,விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவில்பட்டி போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து இருந்தனர்.

Similar News