ஆன்மிகம்

திருஇருதய ஆண்டவர் ஆலய நற்கருணைப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-06-27 10:24 IST   |   Update On 2016-06-27 10:24:00 IST
இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலய நற்கருணைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பிரசித்தி பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நற்கருணைப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

திருவிழா நடக்கும் 10 நாட்களும் பல்வேறு ஆலய பங்குத் தந்தைகள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி மற்றும் சொற்பொழிவு ஆற்றுவார்கள். அதன்படி 122–வது ஆண்டாக இந்த ஆண்டு நற்கருணைப்பெருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்துராஜா தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 1–ந்தேதி மாலை மின்னொளியில் தேர்பவனி நிகழ்ச்சி நடைபெறும்.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம், மறை மாவட்ட பொருளாளர் மைக்கேல்ராஜ் உள்பட பல்வேறு ஆலயங்களில் இருந்து வரும் பங்குத் தந்தையர்கள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்ற உள்ளனர்.

இந்த, விழாவிற்கான ஏற்பாடுகளை திரு இருதய ஆண்டவர் ஆலயப் பொறுப்பாளர் ரெமிஜியஸ், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செசல்ஸ் பேரவை ஆகியோர் செய்து வருகின்றனர்.

Similar News