ஆன்மிகம்

தூய ஜார்ஜியார் திருத்தலப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-04-28 09:11 IST   |   Update On 2016-04-28 09:11:00 IST
கேரள மாநிலம் எடத்துவா தூய ஜார்ஜியார் திருத்தலப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்னிந்தியாவில் பிரபலமான கத்தோலிக்க திருத்தலங்களில் எடத்துவா தூய ஜார்ஜியார் திருத்தலம் முதன்மையானது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் எடத்துவா அமைந்துள்ளது. இங்கு தமிழர்கள் பெருவாரியாக, குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு திருவிழாவை நடத்தி வருவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.

இந்த ஆலயத்தை அமைத்தது முதல் இன்று வரை ஆலயத்தோடு தமிழர்களின் தொடர்பு தொடர்ந்து கொண்டே வருகிறது. கி.பி. 3-ம் நூற்றாண்டில் இயேசுவுக்காக உயிர் துறந்த மறைசாட்சியான தூய ஜார்ஜியாரின் பெயரால் இந்த திருத்தலம் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு திருத்தலப்பெருவிழா ஏப்ரல் 27-ந் தேதி தொடங்கி மே 7-ந் தேதி வரை நடக்கிறது. இதன் பிறகு 14-ந் தேதி வரை மலையாளிகளுக்கான 8 நாட்கள் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 7.30 மணிக்கு திருத்தல பணியாளர் ஜான் மணக்குனேல் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள், தமிழகத்தில் இருந்து எடத்துவா திருவிழா தமிழக ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை டேவிட் மைக்கேல் தலைமையில் தமிழர்களும் பங்கேற்றனர்.

விழாவில் கலந்து கொண்டவர்கள் கற்களை சுமந்து நேர்ச்சையை செலுத்தினர்.கொடியேற்றத்தை தொடர்ந்து, தக்கலை ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் திருப்பலி நடந்தது. இங்கு மே 7-ந் தேதி வரை தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. விழாவையொட்டி நேற்று குழித்துறை மறைமாவட்ட சமூக தொடர்பு தேனருவி இயக்குனர் டேவிட் மைக்கேல் தமிழில் திருப்பலி நிறைவேற்றினார். 7-ந் தேதி நடைபெற உள்ள நிறைவு திருப்பலிக்கு பாளையங்கோட்டை ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்குகிறார். மே 6, 7-ந் தேதிகளில் திருப்பவனி நடைபெறுகிறது.

Similar News