ஆன்மிகம்

புனித அடைக்கல அன்னை ஆலய பெருவிழாவில் தேர்பவனி நடைபெற்றது

Published On 2016-04-18 11:09 IST   |   Update On 2016-04-18 11:09:00 IST
ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய பெருவிழாவில் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட, கிறிஸ்தவ ஆலயங்களில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 9-ந் தேதி மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆலய பெருவிழா தொடங்கியது.

கொடி யேற்ற நிகழ்ச்சியில் பங்கு தந்தை லூர்து சாமி தலைமையில் பங்கு தந்தையர் தஞ்சாவூர் பிரான்சிஸ் சேவியர், தார்சிஸ், புதுக்கோட்டை ராபர்ட் தனராஜ் ஆகியோரின் திருப்பலி நடைபெற்றது. 10-ந் தேதி மாலை 6 மணிக்கு பங்கு தந்தை லூர்துசாமி, உதவி பங்கு தந்தை சந்தனம் ஆகியோரால் திருப்பலி நடைபெற்று சிறிய தேர்பவனி நடைபெற்றது. தொடர்ந்து 11-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பங்கு தந்தையர்கள் ஜெரோம், சூசைராஜ், பெங்களூர் உயர் மறைமாவட்ட குருக்கள் அமர்நாத், ஜான்சுதிப், கில்பர்ட், மோசஸ் ஆகியோரின் கூட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணியளவில் மலர் மற்றும் மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட அடைக்கல அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. தேரில் புனித அடைக்கல அன்னை தமிழ் பெண் அலங்காரத்தில் பட்டுப்புடவையில் எழுந்தருளினார். பின்னர் திரளான கிறிஸ்தவர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் நிகழ்ச்சியில் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அன்னையின் அருளை பெற்றனர். நிகழ்ச்சியில் வாணவேடிக்கை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பகல் 12 மணியளவில் எர்ணாகுளம் பங்குதந்தை ஜோஷி நெடும்பரம்பில் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் பங்கு தந்தையர் லால்குடி தனராஜ், புனல்வாசல் ஆல்பர்ட் சேவியர் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இரவு 11 மணியளவில் அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.

இதில் கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தஞ்சை, அரியலூர் மற்றும் திருமானூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வமணி தலைமையிலான மருத்துவகுழுவினர் சுகாதார ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை லூர்துசாமி, உதவி பங்குதந்தை சந்தனம் மற்றும் பங்கு மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் பங்குதந்தை லூர்துசாமி, உதவி பங்கு தந்தை சந்தனம் ஆகியோரின் நன்றி திருப்பலியுடன் ஆலய கொடியிறக்கம் நடைபெறுகிறது.

Similar News