ஆன்மிகம்
சகோதரி நிர்மலா

அன்னை தெரசாவிற்குப் பிறகு சாரிட்டி மிஷன்களின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சகோதரி நிர்மலா

Published On 2016-04-18 09:23 IST   |   Update On 2016-04-18 09:23:00 IST
அன்னை தெரசாவிற்குப் பிறகு சாரிட்டி மிஷன்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் சகோதரி நிர்மலா.
அன்னை தெரசாவிற்குப் பிறகு சாரிட்டி மிஷன்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் சகோதரி நிர்மலா. 1997-ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய சவால்கள் நிறைந்த இந்த பணியை அவர் ஏற்றார். இந்த பதவி சகோதரி நிர்மலாவுக்கு எளிதாக கிடைத்து விடவில்லை.

இரண்டு மாதமாக பல்வேறு தேர்வுகள் வைக்கப்பட்டு அதன்பின் 132 மூத்த கன்னியாஸ்திரிகள் மூலம் தலைமைப் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்னை தெரசா தனது 86-வது வயதில் முதுமை காரணமாக நிர்வாகப் பணிகளில் இருந்து விலகி, அந்த பொறுப்புகளை நிர்மலா ஏற்றுக்கொண்ட போதும் ‘அன்னை’ என்ற பட்டத்தை மட்டும் அவருக்கு அளிக்கவில்லை. ‘நிர்மலா’ என்றால் சமஸ்கிருதத்தில் தூய்மை என்று அர்த்தம்.

சகோதரி நிர்மலாவின் இயற்பெயர் நிர்மலா தோஷி என்பது. இவர் ராஞ்சியில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோரின் பூர்வீகம் நேபாளம். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். இவரது பெற்றோருக்கு 10 குழந்தைகள். அதில் முதல் குழந்தை நிர்மலா.

படித்ததெல்லாம் பாட்னாவில் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் தான். இருந்தாலும் 24 வயது வரை இந்துவாக இருந்தார். கிறிஸ்தவராக மதம் மாற வேண்டும் என்ற எண்ணம் கூட அவர் மனதில் தோன்றியதில்லை. அதன்பின் தொழு நோயாளிகளிடம் அன்னை தெரசா காட்டும் அன்பு, பரிவு, பாசம், ஏழைகளுக்கு உதவி செய்தல் ஆகியவற்றை அறிந்த சகோதரி நிர்மலா, அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்டு ரோமன் கத்தோலிக்கராக மாறினார்.

நிர்மலா அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், வழக்கறிஞராகவும் பயிற்சிப் பெற்றவர். பனாமா நாட்டில் உள்ள சாரிட்டி மிஷனை தலைமை ஏற்று நடத்திய முதல் கன்னியாஸ்திரி என்ற பெருமை இவருக்கு உண்டு. அதன்பின் இவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மிஷன்களையும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிஷன்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று இருந்தார்.

அன்னை தெரசா வகித்த பதவியை அடைவதற்கு முன் இவர் கொல்கத்தாவில் உள்ள கண்டேம்ப்லேட்டிவ் விங் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தார். இந்த பிரிவில் இருக்கும் கன்னியாஸ்திரிகள் அனைவரும் தங்கள் வாழ்வை தியாகம் செய்வதில் அர்ப்பணிப்பார்கள்.

அன்னை தெரசாவிற்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்ற சகோதரி நிர்மலா 2009 மார்ச் 25-ல் அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றார். முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தார்.

Similar News