கிரிக்கெட்

டோனி எனது தந்தை, சி.எஸ்.கே. வீரர் பதிரனா புகழாரம்

Published On 2024-05-05 05:00 GMT   |   Update On 2024-05-05 05:00 GMT
  • கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார்.
  • டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார்.

தர்மசாலா:

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் 53-வது லீக் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு தர்ம சாலாவில் நடக்கிறது.

இதில் ருதுராஜ் கெய்க் வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சாம்கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிளே ஆப் சுற்று வாய்ப்பில் தொடர்ந்து இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை சூப்பர் கிங்சுக்கு இருக்கிறது. பஞ்சாப் கிங்சுக்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை சி.எஸ்.கே. பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீரர் பதிரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சில் துருப்பு சீட்டாக இருக்கிறார். மலிங்கா போன்று பந்து வீசும் அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 28 ரன் கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றி யது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

உலக கோப்பை விசா நடைமுறைக்காக நாடு திரும்பியதால் அவர் சென்னையில் கடந்த 1-ந் தேதி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திலும் அவர் ஆடுவது சந்தேகம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அவர் அணியோடு இணைந்துள்ளார். இதனால் இன்று விளையாடலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தை மாதிரி என்று பதிரனா தெரிவித்துள்ளார். இது தொடர்ச்சியாக அவர் கூறியதாவது:-

டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று அதிகமான அறிவுரையை வழங்குகிறார். நான் களத்தில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் அவர் கூறும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார். எனது தந்தைக்கு பிறகு அவர் தான் (டோனி), எனது தந்தையின் பங்களிப்பில் உள்ளார்.

வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நிச்சயமாக அவரிடம் சென்று கேட்பேன்.

இவ்வாறு பதிரனா கூறினார்.

பதிரனா கடந்த ஐ.பி.எல். போட்டியில் 12 ஆட்டத்தில் 19 விக்கெட் கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற முக்கிய கரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News