லம்ப்
மகளிர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி
- லம்ப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
- இங்கிலாந்து அணி தரப்பில் நடாலி ஸ்கிவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மகளிர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சி ட்ரையான் 88 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் நடாலி ஸ்கிவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக டாமி பியூமண்ட்- லம்ப் ஜோடி களமிறங்கியது. 1 ரன் எடுத்த நிலையில் டாமி பியூமண்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த சோபியா டங்க்லி 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
லம்ப்- நடாலி ஸ்கிவர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். நடாலி ஸ்கிவர் 55 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை லம்ப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் முறையில் வெளியேறினார்.
இறுதியில் இங்கிலாந்து பெண்கள் அணி 32.1 ஓவரில் 219 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.