கிரிக்கெட்

டி20 உலக கோப்பை தொடரை நடத்தும் அணிகள் கோப்பை வெல்ல முடியவில்லை - தொடரும் சோகம்

Published On 2022-11-07 00:57 GMT   |   Update On 2022-11-07 00:57 GMT
  • டி20 உலக கோப்பை தொடரை நடத்தும் அணி கோப்பையை வென்றதில்லை என்ற சோகம் தொடர்கிறது.
  • அறிமுகமான 2007-ம் ஆண்டின் முதல் தொடரில் இந்தியா கோப்பை வென்று அசத்தியது.

சிட்னி:

கடந்த 2007-ல் அறிமுகப்படுத்தப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் முதலில் நடைபெற்றது. அதில் தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் டி20 உலக கோப்பை தொடர் நடந்தது. அதில் இங்கிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2010-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. அதில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

2012 டி20 உலக கோப்பை தொடர் இலங்கையில் நடைபெற்றது. அதில் இலங்கை இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2014ல் டி20 உலக கோப்பை தொடரை நடத்திய வங்காளதேசம் லீக் சுற்றுடன் நடையை கட்ட, அதில் இலங்கை அணி சாம்பியன் ஆனது.

2016 டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. இந்திய அணி அரையிறுதி வரை சென்று வாய்ப்பை தவறவிட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகமும், ஓமனும் இணைந்து டி20 உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் தகுதிச்சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை. ஓமனோ தகுதிச்சுற்றை தாண்டவில்லை. அதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

இதுவரை நடந்த 7 தொடர்களிலும் போட்டியை நடத்திய அணிகள் கோப்பையை வென்றதில்லை.

இந்நிலையில், 8-வது டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியா நடத்திவரும் நிலையில், அந்த அணி தற்போது குரூப் சுற்றுடன் நடையை கட்டியது. இதையடுத்து, போட்டியை நடத்தும் அணி கோப்பையை வெல்ல முடியாமல் போகும் சோகம் இந்த முறையும் தொடர்கதையாகி உள்ளது.

Tags:    

Similar News