3 போட்டிக்கும் வெவ்வேறு கேப்டன்கள்... மீம்ஸ் போட்டு தென் ஆப்பிரிக்க அணியை கிண்டலடித்த முன்னாள் வீரர்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.
- இன்றைய ஆட்டத்தில் டேவிட் மில்லர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டார்
புதுடெல்லி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது. இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக 3 வெவ்வேறு வீரர்கள் செயல்பட்டுள்ளனர்.
அணியின் வழக்கமான கேப்டன் பவுமா, முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2-வது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை. 2-வது போட்டியில் கேசவ் மகாராஜ் தென் ஆப்பிரிக்காவின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. டேவிட் மில்லர் தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்தினார். இவ்வாறு 3 போட்டிகளுக்கு 3 கேப்டன்களுடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்துள்ளார்.
Shikhar Dhawan at the toss with a different SA captain every game 😄 #INDvSA pic.twitter.com/28iE883xSW
— Wasim Jaffer (@WasimJaffer14) October 11, 2022
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், "ஒவ்வொரு போட்டியின் டாஸின் போதும் வெவ்வேறு தென் ஆப்பிரிக்கா கேப்டன்களுடன் ஷிகர் தவான் இவ்வாறு தான் நிற்பார்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.