கிரிக்கெட்

இந்திய அணி வீரர்கள்

கடைசி டி20 கிரிக்கெட்: 100 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அபார வெற்றி

Update: 2022-08-07 18:11 GMT
  • முதலில் விளையாடிய இந்தியா 188 ரன்கள் குவித்தது.
  • இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அவர்களுக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றனர். ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். துவக்க வீரர் இஷான் கிஷன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் - தீபக் ஹூடா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

அணியின் ஸ்கோர் 114 ஆக இருக்கும்போது இந்த ஜோடியை வால்ஷ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 ரன்கள் விளாசினார். இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 64 ரன்கள் விளாசினார். 


அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி, 2 சிக்சரும் அடங்கும். சஞ்சு சாம்சன் 15 ரன்கள், தினேஷ் கார்த்திக் 12 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள், அக்சர் பட்டேல் 9 ரன்கள், அவேஷ் கான் 1 ரன் (நாட் அவுட்) எடுக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. எனினும் இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாத அந்த அணி 15.4 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹெட்மயர் 56 ரன்கள் அடித்தார். 


ஹோல்டர், கீமோ பால், ஒடியன் ஸ்மித், ஓபேட் மெக்காய் ஆகியோர் டக் அவுட்டானார்கள். இதையடுத்து இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

அக்சர் படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது.

Tags:    

Similar News