கிரிக்கெட்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

கடைசி ஒருநாள் போட்டி: இங்கிலாந்திற்கு எதிராக 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி

Published On 2022-09-24 17:49 GMT   |   Update On 2022-09-24 17:55 GMT
  • இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
  • இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 68 ரன் குவித்து களத்தில் இருந்தார்.

லண்டன்:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 45.4 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக 68 ரன்கள் குவித்த தீப்தி ஷர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மந்தனா 50 ரன்னும், பூஜா 22 ரன்னும் எடுத்தனர். 


இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்லோட் டீன் 47 ரன்னும், எம்மா லாம்ப் 21 ரன்னும் எடுத்தனர். எமி ஜோன்ஸ் 28 ரன் அடித்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளும், ஜூலன் கோஸ்வாமி மற்றும் கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 


இதன்மூலம் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்த போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News