சினிமா

அரசியலில் ரஜினி, கமலோடு இணையமாட்டேன் - பிரகாஷ்ராஜ் பேட்டி

Published On 2018-08-25 11:56 GMT   |   Update On 2018-08-25 11:56 GMT
களத்தில் இறங்கினால் தான் அரசியல்வாதி என்றில்லை, கேள்வி கேட்பவனும் அரசியல்வாதி தான் என்று கூறிய பிரகாஷ்ராஜ் ரஜினி, கமலோடு இணையும் முடிவில் இல்லை என்றார். #PrakshRaj
நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரகனி, இந்துஜா நடிப்பில் உருவாகி உள்ள படம் 60 வயது மாநிறம். கலைப்புலி தாணு தயாரித்து இருக்கிறார். இந்த படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: தயாரிப்பாளர் சங்கத்தில் துணைதலைவர் நீங்கள். உங்கள் செயல்பாடுகளில் சிலர் அதிருப்தி தெரிவிக்கிறார்களே?

பதில்: சிலர் நான் நிறைய வேலைகள் செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். எதை எடுத்துக்கொள்வது? பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். எல்லாவற்றையும் கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு அணியாக இணைந்தோம். நிறைய மாற்றங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

கே: படங்களை எடுப்பதை விட வெளியிடுவது சிரமமான ஒன்றாகி விட்டதே?

ப: சினிமா ஒரு கலை. ஆனால் அது முழுக்க முழுக்க வியாபாரம் ஆகிவிட்டது. அதனால் நிறைய பார்முலாக்களில் சிக்கிக்கொண்டுள்ளோம். தமிழ் சினிமாவில் நல்ல படங்களை எடுத்து ரிலீஸ் செய்யும்போதுதான் அதன் வலி தெரியும். சிரித்துக்கொண்டே படம் எடுத்து அதை ரிலீஸ் செய்யும்போது அழுவது என்பது அவமானமான ஒன்று.

கே. சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறீர்களே?

ப: தமிழ்நாடு, கர்நாடகாவில் கிராமங்களை தத்தெடுத்துள்ளேன். தெலுங்கானாவில் 10 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன்.

அந்த பள்ளிகளை டிஜிட்டலாக்கி இருக்கிறேன். 15 ஆசிரியர்கள் எனது நிறுவனம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மக்களுக்கான தேவை நிறைய இருக்கிறது. என்னால் முடிந்ததை செய்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக்கொண்டால் போதும். எல்லா பொறுப்புகளையும் ஒருவரே எடுத்துக்கொள்ள முடியாது. 60 வயது மாநிறம் போன்ற படங்களும் சமூக பொறுப்பில் உருவாவது தான்.

கே: அரசியலில் இறங்குவது எப்போது?

ப: இப்போதே அரசியலில் தானே இருக்கிறேன். களத்தில் இறங்கித் தான் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. கேள்வி கேட்பவனாக இருப்பதும் அரசியல் தான். இதுவும் சமூகத்துக்கு அவசியம்.



கே: ரஜினி, கமல் அரசியல் பற்றி?

ப: இருவரும் நல்ல நோக்கத்தோடுதான் வந்து இருக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வது பற்றி மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். நான் அவர்களோடு இணையும் முடிவில் இல்லை. தனியாக செயல்படுவேன்.

கே: சினிமா போரடிக்கவில்லையா?

ப: இல்லை. அதனால் தான் வித்தியாசமான வேடங்களில் மட்டும் நடிக்கிறேன். அரசியல், இலக்கியம் என்று என்னை புதுப்பித்துக்கொள்கிறேன். கற்றுக்கொள்கிறேன். ஒரு பறவை போல பயணிக்கிறேன்.

அரசியல் ஆர்வம் எப்படி?

ப: இதுவும் நம் கடமைகளில் ஒன்றுதான். தகப்பன், கணவன், நடிகன், இயக்குனர் போல நாட்டின் குடிமகன் என்பதும் ஒரு பொறுப்பு. அந்த பொறுப்பை சரியாக செய்ய விரும்புகிறேன். அதை கேள்வியாக வெளிப்படுத்துகிறேன்.

கே: அரசியல் மிரட்டல்கள்?

ப: நான் பயந்தால் தானே அது மிரட்டல். அடி விழுந்து அது எனக்கு வலித்தால் தான் அதற்கு பெயர் அடி. இல்லாவிட்டால் அது அடி இல்லை. அப்படித்தான்.

கே: வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ப: அதிகாரத்துக்கு வந்தால் தான் அரசியல் என்று இல்லை. அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பதும் அரசியல் தான். நான் எங்கும் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியல்வாதி இல்லை.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். #PrakshRaj

Tags:    

Similar News