சினிமா

`ரயீஸ்' பட ப்ரமோஷன்: ஷாருக்கானுக்கு எதிராக விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

Published On 2017-03-03 05:16 IST   |   Update On 2017-03-03 05:16:00 IST
`ரயீஸ்' பட ப்ரமோஷனின் போது ஒருவர் உயிரிழந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’ என்ற படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஷாருக்கான் கடந்த மாதம் 24-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு கிராந்தி  எக்ஸ்பிரஸ்  ரெயிலில் சென்றார். முக்கிய ரெயில் நிலையங்களில் அவர் தனது படத்தை மேம்படுத்தினார். ரெயிலில் இருந்தவாறு ரசிகர்களை  பார்த்து கையசைத்தார்.



ஷாருக்கானை பார்ப்பதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அவரது ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா ரெயில் நிலையத்தில் ரெயில் சிறிது நேரம் நின்றபோது ஷாருக்கானை பார்க்க அவரது  ரசிகர்கள்  திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலின் போது ஏற்பட்ட பரபரப்பில் மாரடைப்பு ஏற்பட்டு ரெயில் நிலையத்தில் ஒருவர்  உயிரிழந்தார். மேலும் கடைகள், பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இந்த சம்பவம் குறித்து ஜிதேந்திர சோலன்கி என்பவர் ஷாருக்கானுக்கு எதிராக வழக்கு பதியும்படி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.  மேலும் ஷாரூக்கானின் `ரயீஸ்' பட ப்ரமோஷனுக்கு அனுமதி அளித்த மேற்கு ரயில்வே கோட்ட இயக்குநர் மீதும் போலீசில் வழக்கு  பதிய கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் பிரியங்கா லால், இந்த வழக்கு குறித்த விசாரணையை தீவிரப்படுத்தும் படி ரயில்வே துணை  கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை குறித்த முழு அறிக்கையை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும்  உத்தரவிட்டுள்ளார்.

Similar News