தரவரிசை
விமர்சனம்

சாதி செய்யும் மாயம் - சாயம் விமர்சனம்

Published On 2022-02-04 20:57 IST   |   Update On 2022-02-04 21:58:00 IST
ஆண்டனி இயக்கத்தில் அபி சரவணன், ஷைனி நடிப்பில் வெளியாகி இருக்கும் சாயம் படத்தின் விமர்சனம்.
ஊர் தலைவராக இருக்கும் பொன்வண்ணன், மனைவி சீதா மற்றும் மகன் அபி சரவணனுடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் அபி சரவணன் சாதி வேறுபாடில்லாமல் நண்பர்களுடன் சகஜமாக பழகி வருகிறார். இவருடைய அத்தை மகள் ஷைனி, அபி சரவணனை காதலித்து வருகிறார். ஆனால் அவரோ பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அபி சரவணன், ஷைனி இருவருக்கும் திருமணத்தை செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் ஒருநாள் அபி சரவணன், தனது நண்பருடன் ஷைனி பேசுவதை தவறாக புரிந்து கொள்கிறார். இதனால் நண்பர்களுக்குள் பிரச்சனை வர, அபி சரவணன் தனது நண்பரை கொன்றுவிடுகிறார்.

ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் ஆண்டனி இந்த கொலையை சாதிப் பிரச்சனையாக மாற்றுகிறார். ஜெயிலில் இருக்கும் அபி சரவணனை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது. இறுதியில் கொலை செய்ய வரும் கும்பலிடமிருந்து அபி சரவணன் தப்பித்தாரா? சாதி பிரச்சனை தீர்ந்ததா? ஜெயிலில் இருந்து அபி சரவணன் வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அபி சரவணன் முற்பகுதியில் சாதுவாகவும், பிற்பாதியில் வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷைனியின் நடிப்பு படத்திற்கு பெரியதாக எடுபடவில்லை. பொன்வண்ணன், போஸ் வெங்கட், தென்னவன் ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. 

இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் ஆண்டனி. இவர் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். சாதிப் பிரச்சினையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் ஆண்டனி. நல்ல கதை களத்தை கொண்டு திரைக்கதை செய்வதில் சிரமப்பட்டிருக்கிறார். 

நாக உதயனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சலீம் - கிரிஸ்டோபர் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் 'சாயம்' மாயம் செய்யவில்லை.

Similar News