சினிமா
ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் கார்பன் படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விதார்த் நடிப்பில் 25 வது திரைப்படமாக உருவாகும் படத்திற்கு “கார்பன்” என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி, டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதையை சரியாக பிரதிபலிக்கும் பொருட்டே, இத்தலைப்பை வைத்ததாக இயக்குநர் ஶ்ரீனிவாசன் கூறியுள்ளார். படத்தில் விதார்த் கதாப்பாத்திரம், கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். நாம் கார்பன் பேப்பரில் எழுதும்போது அச்சுப்பிசகாமல் அடி பேப்பரில் பதிவது போல் இந்த சம்பவம் நடைபெறுவதால் படத்திற்கு ‘கார்பன்’ தலைப்பு பொருத்தமாக இருக்குமென இத்தலைப்பை வைத்ததாக கூறியுள்ளார் இயக்குநர்.
தன்யா, விதார்த்
சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயச்சந்திரன் கலை இயக்கம் செய்ய, பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்துள்ளார். கனல் கண்ணன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிக்கப்பட்டது பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் திருக்கோயிலூரில் படமாக்கப்பட்டுள்ளது. பென்ச்மார்க் பிலிம்ஸ் சார்பில் ஜோதி முருகன் மற்றும் ஸ்ரீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.