சினிமா

ஜூலியும் நாலு பேரும்

Published On 2017-02-22 05:27 GMT   |   Update On 2017-02-22 05:27 GMT
சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசும் கதையான ஜூலியும் நாலு பேரும் படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
கதையின் முக்கிய சாராம்சம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசுகிறது. அமெரிக்காவில் கடத்தப்படும்  இடது காதில் மூன்று அதிர்ஷ்ட மச்சங்களை கொண்ட “ஜூலி” என்கிற அதிர்ஷ்ட நாயை மையமாக வைத்து கதை நகர்கிறது.

இப்படத்தில் பிரபல டிவி புகழ் அமுதவாணன், சதீஷ்.ஆர்.வி. ஜார்ஜ் விஜய், யோகானந்த், அல்யா மனாசா, யோதீஷ் சிவன், பில்லி  முரளி, மகாநதி ஷங்கர், மாறன், வெங்கட் ராவ், ஹோமாய், சாண்டி மாஸ்டர், ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில்  நடித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் - எஸ்.பிரேம் குமார்(காவ்யா சினிமாஸ்), இணை தயாரிப்பாளர் - என். சுவேதா தேவி(ரீச் மீடியா சொலூசன்ஸ்),  இயக்குநர் - சதீஸ்.ஆர்.வி., புகைப்பட இயக்குநர் - பாஸ்கர், இணை இயக்குநர் - யோதீஷ் சிவன், இசை - ரகு ஷரவன் குமார்,  எடிட்டிங் - வி.ஏ. மழை தாசன். கலை - சிட்டி பாபு



இப்படம் குறித்து இயக்குநர் தெரிவித்ததாவது, நாய் கடத்தல் கும்பலின் தலைவனான வில்லன் மூலமாக ஜூலி என்கிற நாய்  இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபருக்கு விற்கப்படுகிறது.

மறுபுறம், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் 3 இளைஞர்களும் சென்னையில்  வசித்து வரும் ரஜினியின் தீவிர ரசிகராக ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் எனும் இளைஞரும், நண்பர்களாகின்றனர்.

வேலை தேடிவந்த மூவரும் சென்னையில் ஒரு கன்சல்டன்சியிடம் பணத்தை பறிகொடுக்கின்றனர். விட்ட பணத்தை குறுக்கு  வழியிலாவது சென்னையிலேயே சம்பாதிக்க எண்ணி, “ஜூலி நாயை” வாங்கிய தொழிலதிபரின் மகளிடமிருந்து அதை  கடத்துகின்றனர்.



கோடிக்கணக்கில் மதிப்புள்ள கடத்தப்பட்ட நாயை தேடி ஒருபுறம் தொழிலதிபர் இவர்களை துரத்த, நாயை வேறு ஒரு நாட்டு  நபருக்கு விற்பதற்காக, நாயை தேடி வில்லனும் அவனது ஆட்களும் நால்வரையும் துரத்த, அதே சமயத்தில் ஜூலி என்ற பெண்  ஒருவர் காணாமல் போக, குழப்பத்தில் போலீஸும் இவர்களை துரத்த, நால்வரும் செய்யும் கலாட்டாக்களை நகைச்சுவையாக  எடுத்துச்செல்கிறது, இப்படம்.

அதிர்ஷ்ட நாய் ஜூலி யாரிடம் சேர்கிறது என்பதும், எல்லோரிடமிருந்தும் எப்படி நால்வரும் தப்பிக்கிறார்கள்?, விட்ட பணத்தை  அடைந்தார்களா? இல்லையா? என்பதையும் பரபரப்புடன் அமைந்த படத்தின் இறுதிக்கட்டங்கள் எடுத்துச்செல்கிறது.

இவ்வாறு தெரிவித்தார்.

Similar News