சினிமா

சும்மாவே ஆடுவோம்

Published On 2016-06-14 16:06 GMT   |   Update On 2016-06-14 16:06 GMT
‘திருட்டு வி.சி.டி.’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ‘காதல்’ சுகுமார் இயக்கும் இரண்டாவது படம் ‘சும்மாவே ஆடுவோம்’. ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ. ஆனந்தன் தயாரிக்கும் இப்படத்தில் அருண் பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகிறார்.
‘திருட்டு வி.சி.டி.’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ‘காதல்’ சுகுமார் இயக்கும் இரண்டாவது படம் ‘சும்மாவே ஆடுவோம்’.

ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ. ஆனந்தன் தயாரிக்கும் இப்படத்தில் அருண் பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகிறார். சர்வதேச அளவில் புகழ் பெற்ற நீச்சல் வீரரான இவர், குற்றாலீஸ்வரனின் சாதனையை முறியடித்தவர். நாயகியாக லீமா பாபு நடிக்கிறார்.

இவர்களுடன் டி.என்.ஏ. ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, ராபர்ட், யுவராணி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, மனோ, ரவி, சுஜித், அம்மு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களுடன், 45 முன்னணி காமெடி நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு-வில்லியம்ஸ். படத்தொகுப்பு-சதீஷ் பி.கோட்டாய், கலை-மதூர் எஸ்.சிவா, ஸ்டண்ட்-டேஞ்சர் மணி, நடனம்-பாலகுமாரன், ரேவதி, தினா, ஜாய் மதி.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘காதல்’ சுகுமார் கூறுகையில், “கூத்து கலை என்பது ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தாலும் தற்போது நலிவடைந்துள்ளது. அந்த கலையை நம்பியிருக்கும் கலைஞர்களின் தற்போதைய நிலையைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம். முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம்.

கதைப்படி, மதுரையில் உள்ள ஜமீன் ஒருவர் கூத்து கலைஞர்களுக்காக ஒரு கிராமத்தை இலவசமாக கொடுக்கிறார். அந்த கிராமத்திற்கு ஆபத்து வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், என்பதைத் தான் காமெடியாக சொல்லியிருக்கிறோம்” என்றார்.

மூன்று காலகட்டத்தில் நடப்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோபி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

Similar News