தரவரிசை

#Review செல்லமடா நீ எனக்கு விமர்சனம்

Published On 2026-03-07 16:16 IST   |   Update On 2026-03-07 16:16:00 IST
  • சிறுவயதில் இருந்தே நாயகன் வசீகரன் தனது தாய் செந்தியை வெறுத்து அவமானப்படுத்தி வருகிறார்.
  • தாய்மகன் உறவில் இருக்கும் பாசம், வேதனை மற்றும் தியாகங்களை உணர்ச்சியோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

சிறுவயதில் இருந்தே நாயகன் வசீகரன் தனது தாய் செந்தியை வெறுத்து அவமானப்படுத்தி வருகிறார். ஆனால் அந்த தாய், மகன்தான் தனது உலகம் என்ற எண்ணத்தில், அவனுக்காக எண்ணற்ற தியாகங்களை செய்து அமைதியாக வாழ்ந்து வருகிறார். மகன் காட்டும் வெறுப்பையும் அவமதிப்பையும் மனதில் புதைத்து கொண்டு, ஒரு நாள் அவன் தனது அன்பை புரிந்துகொள்வான் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை தாங்கி நிற்கிறார் அந்த தாய்.

இறுதியில் வசீகரன் ஏன் தாயை இவ்வளவு வெறுக்கிறார்? அவரது தந்தை யார்? அந்த தாயின் கடந்த காலத்தில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிறுவயதில் இருந்து தாயை ஒதுக்கி விட்டு வாழும் வசீகரன், இறுதியில் தனது தாயின் வாழ்க்கை பின்னணி மற்றும் அவர் செய்துள்ள தியாகங்களை அறியும் தருணத்தில் மனம் உடைந்து கதறி அழும் காட்சிகள் பார்வையாளர்களையும் கண்கலங்க வைக்கிறது. மகனின் அன்புக்காக ஏங்கி தவிக்கும் தாயாக பசங்க செந்தி நடிப்பு படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது.

காதலியாக வரும் நேகாவுக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும், வசீகரனிடம் அவரது தாயின் உண்மையான பாசத்தை எடுத்துரைக்கும் காட்சிகளில் அமைதியான மற்றும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். நண்பனாக வரும் அமுதவாணன் தனது கலகலப்பான வசனங்களால் படத்தின் இடையிலான சோகத்தை சற்றே குறைத்து சிரிப்பை ஏற்படுத்துகிறார். திருடன் கதாபாத்திரத்தில் வரும் போஸ் வெங்கட் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சில துணை கதாபாத்திரங்களுக்கு நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

தாய்மகன் உறவில் இருக்கும் பாசம், வேதனை மற்றும் தியாகங்களை உணர்ச்சியோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சிவம். சில இடங்களில் காட்சிகள் இன்னும் அழுத்தமாக அமைந்திருந்தால் படத்தின் தாக்கம் அதிகரித்திருக்கும்.

தாஜ்நூர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. செல்வா.ஆர் ஒளிப்பதிவு கிராமத்து சூழலையும் கதையின் உணர்ச்சிகளையும் அழகாக பதிவு செய்துள்ளது.

Tags:    

Similar News