சினிமா செய்திகள்
null

தமிழ் சினிமாக்கள் தொடர்ந்து தோல்வி அடைவது ஏன்? - வைரமுத்து சொன்ன முக்கிய காரணம்!

Published On 2025-09-16 04:45 IST   |   Update On 2025-09-16 04:45:00 IST
  • ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை
  • ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம்.

வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் படம் 'படையாண்ட மாவீரா' . திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ''கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன உணர்வோடும், மொழி உணர்வோடும் இயங்குகிற சிலரில் இவரும் ஒருவர். அவர் என் இளைய தம்பி என கொண்டாடுவேன். எனவே கௌதமன் இயக்கியிருக்கும் படைப்பு வெற்றி பெற வேண்டும். அவருடைய படைப்பு மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என வாழ்த்துவதற்காக வருகை தந்திருக்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் நோக்கும், போக்கும் துன்பப்படுகிற நிலையில்தான் இருக்கிறது. இன்றைக்கு 200 திரைப்படங்கள் வெளியானால் அதில் 10 படங்கள்தான் வெற்றிக்கு அருகில் வருகின்றன என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. நம்மிடம் மிகப்பெரும் நடிகர்கள் இருக்கிறார்கள், மிகப்பெரும் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், மிகப் பெரிய ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள், மிகப் பெரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள்.

ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், இவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படம் எடுக்காமல் படத்தை பார்த்து படம் எடுக்கிறார்கள். படம் என்பது பிம்பம். வாழ்க்கை என்பது நிஜம்.

ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம். அந்த வாழ்க்கையில் இருந்து கடந்து சென்ற வாழ்க்கை, தொட்ட வாழ்க்கை, துன்புற்ற வாழ்க்கை, துன்பப்படுத்திய வாழ்க்கை, சக மனிதனை துன்புறுத்தி சென்ற வாழ்க்கை இவற்றை நீ படமாக எடுத்தால்.. பார்வையாளர்களுக்கும், படைப்புக்கும் ஒரு தொடர்புத் தன்மை ஏற்பட்டிருக்கும். இந்த தொடர்பு தன்மையற்று போனதால் பல திரைப்படங்கள் ரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டு போயின என நான் நினைக்கிறேன்.

எட்டு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் சினிமாவை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக சுருங்கி விட்டார்கள். இதற்கு காரணம் என்ன என்று பார்த்தோமானால் சினிமா தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டு விட்டது. தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, இன்று அதே தொழில்நுட்பத்தால் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை வருந்தத்தக்கதாகவே கருதுகிறேன்.

அதிலும் தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்? திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார், அவரை அழித்தது யார்? வசனகர்த்தா என்று ஒருவர் இருந்தார், அவரை மழித்து வழித்தெடுத்தது யார்?

மகாபாரதத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. ராமாயணத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. இந்த இரண்டு இதிகாசங்களின் கதையும் மக்களுக்கு தெரிந்ததுதான்.

படையாண்ட மாவீரா படத்தை பொருத்தவரை இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வியர்வை என ஒரு உண்மையான போராளியின் போராட்ட கதையாக இருப்பதால், இதில் கற்பனைகளுக்கு இடமில்லை. விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதில் இருக்கும் நிஜம் படத்தின் பலம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தை காண வரும் ரசிகர்களை பொறுத்தது. தமிழர்களை பொறுத்தது என நான் கருதுகிறேன்.

மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தனக் காட்டு வீரப்பன் போன்ற வாழ்ந்த வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள். அந்த வரிசையில் இந்த படையாண்ட மாவீரா படத்தையும் மக்கள் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்,'' என்றார். 

Tags:    

Similar News