சினிமா செய்திகள்
null

யோகிபாபு படத்தை வெளியிடுவதில் தகராறு.. ஊழியர்கள் 2 பேரை கடத்தி தாக்குதல்..

Published On 2022-12-06 10:33 GMT   |   Update On 2022-12-06 10:34 GMT
  • சினிமாப்பட விநியோகஸ்தர் மதுராஜ் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
  • இவரது ஊழியர்கள் இரண்டு பேரை மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் மதுராஜ். சினிமாப்பட விநியோகஸ்தர். விருகம்பாக்கம் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். போரூர் பகுதியை சேர்ந்த கோபி, பென்சீர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இதையடுத்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்த "ஷூ" என்கிற சினிமா படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவும், சேட்டிலைட் உரிமம் ஆகியவற்றை ரூ.1கோடியே 10 லட்சத்துக்கு பேசி ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து மீதமுள்ள தொகையை 2 தவணைகளாக 90 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக மலேசியாவைச் சேர்ந்த பட தயாரிப்பாளரிடம் மதுராஜ் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதனிடையே மதுராஜ் தனது மனைவியின் பிரசவத்திற்காக சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டதாக தெரிகிறது இதனால் அவர் சொன்னபடி தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மதுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.


ஷூ

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மதுராஜ் அலுவலகத்திற்குள் புகுந்த 13 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்த ஊழியர்கள் கோபி, பென்சீர் ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து கத்தி முனையில் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். தாம்பரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவர்கள் ஏ.டி.எம் கார்டு மற்றும் செல்போன்களையும் பறித்துக் கொண்டனர்.

பின்னர் அவர்களை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு மிரட்டல் விடுத்து தப்பி சென்றுவிட்டனர். மேலும் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இதுபற்றி அறிந்த சினிமா வினியோகஸ்தர் மதுராஜ் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் கவுதமன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த கடத்தல் தொடர்பாக தாம்பரம் அருகே பதுங்கி இருந்த நாகராஜ், வினோத் குமார், சொக்கலிங்கம், பிரசாந்த் ஆகிய 4 பேரை இன்று அதிகாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகராஜ், வினோத் குமார் இருவரும் வக்கீல்கள் என்பதும் சொக்கலிங்கம் கல்லூரி மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News