இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது அவர் நீட்டிப் பிடித்த நெருப்பு.. கருணாநிதிக்கு வைரமுத்து புகழஞ்சலி
- கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
- இவருக்கு புகழஞ்சலி செலுத்தி வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அமைதி பேரணியாக சென்று, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், கருணாநிதி நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் புகழஞ்சலி செலுத்தி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சதையும் எலும்பும் மறைந்த பிறகும் தத்துவங்கள் வாழ்கின்றன. கலைஞர் ஒரு தத்துவம், இன்று இருமொழிக் கொள்கை என்ற தத்துவம். தாய்மொழிக் காப்பு என்ற கேடயமாகவும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற ஈட்டியாகவும் இந்த நிமிடம் கலைஞர் வாழ்கிறார். இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது அவர் நீட்டிப் பிடித்த நெருப்பு; அணைய விடாதீர், நெருப்பை அரிப்பதில்லை கரையான்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றொரு பதிவில், "கலைஞர் நினைவிடம்
இந்த இடத்தில்
மட்டும்தானா நினைவு?
இதய வெளிகளில்
காற்று வெளிகளில்
தமிழ் ஒலிகளில்
தமிழ்நாட்டுத் தடங்களில்
எங்கெங்கும்
உங்கள் நினைவுதான்
வணங்குகிறோம் உங்களை
வாழ்த்துங்கள் எங்களை" என்று குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் ஒரு தத்துவம்#KalaignarForever | #கலைஞர் #கலைஞர்100 | #Kalaignar100 pic.twitter.com/eR4gVqeiaX
— வைரமுத்து (@Vairamuthu) August 7, 2023