சினிமா செய்திகள்

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்

Published On 2025-11-21 11:56 IST   |   Update On 2025-11-21 13:10:00 IST
  • இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.
  • சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது.

யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பல்வேறு யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங் கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் என்னை அடையாளப்படுத்தும் வகையில் எனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன் படுத்தக் கூடாது.

சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் "இசை அமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்பிங் செய்தும், ஏ.ஐ. தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி மாற்றியும் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்" என்று கூறப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வக்கீல், "இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.

இது அவரது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால், யூடியூப் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதி இன்றி இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது" என்றார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி யூடியூப் சேனல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Tags:    

Similar News