நடிகை மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்
- ஆலுவாவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் நண்பர்களுடன் மது அருந்த வந்தார்.
- ஐ.டி.ஊழியரை காரில் கடத்தி சென்று, வெடிமரா பகுதியில் வைத்து தாக்கினர்.
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். தமிழில் கும்கி, வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். கொச்சி அருகே ஆலுவா நகரில் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி எர்ணாகுளம் பானர்ஜி சாலையில் உள்ள மதுபாருக்கு லட்சுமி மேனன் தனது 4 நண்பர்களுடன் சென்றதாக தெரிகிறது.
அங்கு ஆலுவாவை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஷா சலீம் என்பவர் நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அப்போது அவருக்கும், லட்சுமி மேனனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஷா சலீமை காரில் கடத்தி சென்று, வெடிமரா பகுதியில் வைத்து தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார், நடிகை லட்சுமி மேனன், அவரது நண்பர்கள் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் லட்சுமி மேனன் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை மூலம் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக நடிகை லட்சுமி மேனன், ஐ.டி. ஊழியர் ஆகிய 2 பேரும் ஐகோர்ட்டில் தெரிவித்தனர். இதை பரிசீலித்த நீதிபதி டயஸ் தலைமையிலான அமர்வு, நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.