சினிமா செய்திகள்

கயிலன்- திரைவிமர்சனம்

Published On 2025-10-11 21:33 IST   |   Update On 2025-10-11 21:33:00 IST
திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் கயிலன்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார் ரம்யா பாண்டியன். ஒருநாள் இவருக்கு மர்ம நபரிடம் இருந்து இமெயில் ஒன்று வருகிறது. அதில் இன்னும் சில நாட்களில் வார் ஒன்று நடக்க போகிறது என்று இருக்கிறது. இதை பார்த்த ரம்யா பாண்டியன், உடனே அதை செய்தியாக்கி வெளியிடுகிறார்.

இதற்கு பல எதிர்ப்புகள் வருகிறது. யார் என்று தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த இமெயிலை வைத்து செய்தியை வெளியிட்டது தவறு என்று பிரச்சனை வருகிறது. மீண்டும் மர்ம நபரிடம் இருந்து இமெயில் வருகிறது. இதை போலீசுக்கு தெரியப்படுத்துகிறார் ரம்யா பாண்டியன். இதை விசாரிக்க அதிகாரியான ஸ்சுவேதா களம் இறங்குகிறார். இவருடைய விசாரணையில் மர்ம நபர் பெயர் காரி என்று தெரியவருகிறது.

இறுதியில் காரி என்பவர் யார்? எதற்காக மிரட்டுகிறார்? காரியை ஸ்சுவேதா கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறார் ஸ்சுவேதா நாயர். இவரது உடை, உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. நிதானமாக இவர் யோசிக்கும் போதும், கேள்விகள் கேட்கும் போதும் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் பத்து நிமிடம் மட்டுமே வந்து சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் பிரஜன். தாய், தந்தை இழந்த காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

இயக்கம்

திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருள் அஜித். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். ஏ ஐ டெக்னாலஜியை அனைவருக்கும் புரியும் படி சொல்லியிருக்கிறார். நிறைய காட்சிகள் வசனத்திலேயே கடந்து போயிருக்கிறார். இதை தவிர்த்து இருக்கலாம். நிறைய கதாபாத்திரங்களை வீணடித்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு

அமீன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சிகள் தெளிவாக அமையவில்லை.

இசை

கார்த்திக் ஹர்ஷா இசையில் பாடல்கள் கவரவில்லை. ஹரியின் பின்னணி இசை பெரியதாக எடுபடவில்லை.

Tags:    

Similar News