சினிமா செய்திகள்

எப்படி இருக்கிறது 'சாரா' - திரை விமர்சனம்!

Published On 2025-12-07 18:53 IST   |   Update On 2025-12-07 18:53:00 IST
  • அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்
  • நாடக வடிவில் நகர்கிறது படம்.

கட்டுமான நிறுவனம் ஒன்றில் முதன்மை பொறியாளராக பணியாற்றுகிறார் படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால் (சாரா). சாராவுக்கும், அங்கு பணியாற்றும் மற்றொரு பொறியாளர் விஜய் விஷ்வாவுக்கும் காதல் மலர்கிறது. காதலுக்கு சாராவின் பெற்றோரும் ஒப்புதல் அளித்தனர். இச்சூழலில் கட்டிடங்களுக்கு கலப்பட மணல் அனுப்பி ஏமாற்றும் வெட்டுக்கிளிக்கும் (மிரட்டல் செல்வா) சாராவுக்கும் பகை ஏற்படுகிறது.

இவர்களுக்கு மத்தியில் கட்டுமான நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருப்பவர் ரோபோ சங்கர். காசுக்காக எதையும் செய்பவர். அவருடைய நண்பன் யோகிபாபு. இவர்களின் அனைவரின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி, மதிக்கப்படாமல் அந்த இடத்தை சுற்றி கொண்டிருக்கும் ஒரு நபர் செல்லக்குட்டி.  இவர்கள் அனைவரும் வெட்டுக்கிளிக்கு உதவியாக சாரவைக் கடத்த முயல்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னால் செல்லக்குட்டி சாராவையும், அவளது காதலரையும் கடத்துகிறார். செல்லக்குட்டி ஏன் சாராவை கடத்தவேண்டும்? கல்யாணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை. 

நடிப்பு

தனக்கான ரோலில் கட்சிதமாக நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால். விஜய் விஷ்வா, சில காட்சிகளோடு காணாமல் போகிறார். படத்தின் இயக்குநர் செல்லக்குட்டி, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரையே மிஞ்சுகிறார் என பார்வையாளர்கள் விமர்சனம் செய்வதற்கு ஏற்றார்போல ஓவர்டோஸ் நடிப்பு. அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். யோகி பாபு, ரோபோ சங்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரின் காமெடி பரவாயில்லை. ஆனால் ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம். இறுதியாக நாடக வடிவில் நகர்கிறது படம். 

இயக்கம்

இயக்குநர் செல்லகுட்டி, தான் சொல்ல நினைத்த கதையில் எப்படியோ பாதியை சொல்லிவிட்டார். பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் என அனைத்து கோமாளிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் செல்லகுட்டி, இயக்குநராக வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரு நடிகராக நிச்சயம் டிரெண்டாக வாய்ப்புள்ளது. 

இசை

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. 

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மன் குமார் கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியுள்ளார். படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் இயக்குநரின் கதையை சிதைக்காத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

Tags:    

Similar News