சினிமா செய்திகள்

ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்த குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு

Published On 2025-09-30 23:37 IST   |   Update On 2025-09-30 23:37:00 IST
  • அதிகாலையில் குடியிருப்பில் சார்ட் சர்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
  • சிறுவர்களின் விருப்பத்தின்படி, அவர்களது குடும்பத்தினர் இருவரின் கண்களையும் தானம் செய்தனர்.

சோனி டிவியில் ஸ்ரீமத் ராமாயணம் இந்தி தொடரில் நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் சர்மா (10 வயது) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் சன் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இவர் வீர ஹனுமான் தொடரில் லட்சுமணனாகவும் நடித்துள்ளார். சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் சிறுவயது சைஃப் அலிகானாகவும் நடித்திருந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் உள்ள வீட்டில் வீர் சர்மா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடியிருப்பில் சார்ட் சர்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில், தந்தையான ஜிதேந்திர சர்மா பஜனை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார், தாயார் ரீட்டா சர்மா வேலை விஷயமாக மும்பையில் இருந்தார்.

தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வீர் மற்றும் அவரது சகோதரர் சௌரியா, புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி சுயநினைவை இழந்தனர்.

வீட்டின் அறையில் இருந்து புகை வந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுவர்களின் விருப்பத்தின்படி, அவர்களது குடும்பத்தினர் இருவரின் கண்களையும் தானம் செய்தனர்.

கோட்டா போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Tags:    

Similar News