சினிமா செய்திகள்

அனுஷ்கா - விக்ரம் பிரபு நடித்த Ghaati படத்தின் திரைவிமர்சனம்!

Published On 2025-09-09 13:40 IST   |   Update On 2025-09-09 13:40:00 IST
மலைவாழ் மக்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ்

கதைக்களம்

ஒரிசா மலைப்பகுதிகளில் காட்டி என்று அழைக்கப்படும் மலைவாசிகள் உயர் ரக கஞ்சா பயிரிட்டு, அதை சமவெளி பகுதிக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். அடிமை வாழ்க்கை வாழும் காட்டி சமூகத்தில் பிறந்த அனுஷ்காவும், விக்ரம்பிரபுவும் மற்றவர்களை போல கஞ்சா சுமக்கும் வேலையை செய்கிறார்கள்.

ஒரு போலீஸ் ரெய்டில் தந்தையை இழக்கும் விக்ரம்பிரபு லேப் டெக்னிஷியனாக மாறுகிறார். ஒரிசா பஸ் கன்டக்டராக அனுஷ்கா மாறுகிறார். இருவரும் திருமணம் செய்ய இருக்கும் நேரத்தில் விக்ரம் பிரபுவை கொடூரமாக கொலை செய்து, அனுஷ்காவை மானபங்கபடுத்துகிறார்கள் வில்லன்களான அண்ணன், தம்பி ரவிந்திரவிஜய், சைதன்யாராவ்.

இதனால் கோபமடையும் அனுஷ்கா வில்லன்களை பழிவாங்க நினைக்கிறார். மேலும் கஞ்சா சுமக்கும் தொழிலை விட்டு, காட்டிகள் நல்ல பாதைக்கும் திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறார். இறுதியில் அனுஷ்கா நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனுஷ்கா, ஆரம்பத்தில் துறுதுறு பெண்ணாக நடித்து பின்னர் எதிரிகளை துவம்சம் செய்யும் பெண்ணாக மாறி அசத்தி இருக்கிறார். காதலன் கொல்லப்பட்ட பிறகு காரணமானவர்களை தேடி சென்று ஆக்ரோசமாக கொல்லும் காட்சிகள் சிலிர்க்க வைக்கிறது.

அனுஷ்கா காதலனாக, காட்டி மக்களுக்கு நல்லது செய்பவராக நன்றாக நடித்து இருக்கிறார் விக்ரம்பிரபு. இடைவேளை காட்சியில் அவரின் உருக்கமான நடிப்பு படத்துக்கு பலம். சைதன்யாராவ், ரவீந்திரவிஜய் வில்லன்களாக மிரட்டியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் ஜெகபதிபாபு மனதில் நிற்கிறார்.

இயக்கம்

ஒரிசா பின்னணியில் காட்டிகள் என்ற மலைவாழ் மக்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ். மலைவாழ் மக்களை அடிமையாக்கி பலர் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார். மக்கள் சந்திக்கும் துயரங்களை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். முழுக்க முழுக்க அனுஷ்காவை முன்னிலைப்படுத்தி கதையை நகர்த்தி இருப்பதால் பல சீன்கள் போரடிக்கின்றன.

ஒளிப்பதிவு

மலைகாட்சிகள், கஞ்சா கடத்தும் காட்சிகள் என தத்ரூமாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ்.

இசை

நாகவல்லி வித்யாசாகர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை சிறப்பு.

தயாரிப்பு

First Frame என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

ரேட்டிங்- 2.5/5

Tags:    

Similar News