சினிமா செய்திகள்
திலீப்

நடிகை பலாத்கார வழக்கில் புதிய திருப்பம்

Published On 2022-05-24 11:47 GMT   |   Update On 2022-05-24 11:47 GMT
ஆளும் கட்சியினரின் தலையீட்டால் நடிகை பலாத்கார வழக்கை திசைதிருப்ப முயற்சிசெய்வதாக கேரள ஐகோர்ட்டில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் திலீப்பை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கின் சாட்சிகளை கலைக்க முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாகவும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொச்சி கோர்ட்டில் நடந்து வரும் நடிகை பலாத்கார வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இன்னும் வழக்கு விசாரணை முடிவுக்கு வரவில்லை.

இதற்கிடையே வழக்கு தொடர்பான தொடர் விசாரணை அறிக்கையை வருகிற 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை தற்போது கேரள ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் திலீப்புக்கு ஆளுங்கட்சியை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளது. அரசியல் தலையீடு காரணமாக வழக்கில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வழக்கின் சாட்சியங்களை கலைத்ததற்கான ஆதாரங்கள் இருந்தும் நடிகர் திலீப்பின் வக்கீல்களிடம் இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
 

திலீப்

இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக இருந்த மெமரி கார்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை நீதிபதியின் நடவடிக்கைகளும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மெமரி கார்டை சேதப்படுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க இதுவரை முயற்சி மேற்கொள்ளவில்லை. எனவே எனக்கு நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே ஐகோர்ட்டு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள நடிகை தாக்கல் செய்துள்ள இந்த மனு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News