சினிமா
டி.ராஜேந்தர்

தனது தீவிர ரசிகர் இயக்கிய படத்துக்கு உதவிய டி.ராஜேந்தர்

Published On 2021-03-09 11:00 IST   |   Update On 2021-03-09 11:00:00 IST
ஞான ஆரோக்கிய ராஜா இயக்கியிருக்கும் ‘உதிர்’ படத்தின் பாடல் வரிகள் வீடியோவை வெளியிட்ட டி.ராஜேந்தர், பாடல்களை கேட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. டி.ராஜேந்தரின் தீவிர ரசிகராக மட்டும் இன்றி அவரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட ஞான ஆரோக்கிய ராஜா, அவரைப் போலவே பாடல்கள் எழுதி நல்ல திரைப்படத்தையும் இயக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். 

அதன்படி, ‘உதிர்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு, அனைத்து பாடல்களையும் எழுதிய அவர் படத்தை தயாரிக்கவும் செய்தார். அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், பாடல் வரிகள் வீடியோவை டி.ராஜேந்தர் நேற்று வெளியிட்டதோடு, பாடல்களை கேட்டு, இயக்குநரும் பாடலாசிரியருமான ஞான ஆரோக்கிய ராஜாவை வெகுவாக பாராட்டி உள்ளார்.



பாடல்கள் குறித்து பேசிய டி.ராஜேந்தர், “‘உதிர்’ படத்தின் பாடல் வரிகள் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி. படத்தின் பாடல்களை கேட்கும் போதே, கதை உணர்வுப்பூர்வமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகமாக இருந்தாலும், அனைத்தும் கேட்கும் ரகமாக இருப்பதால் ‘உதிர்’ படமும் பாடல்களும் ரசிகர்களின் உயிரோடு கலக்கும் என்பது நிச்சயம். ‘உதிர்’ படம் மூலம் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அறிமுகமாகும் ஞான ஆரோக்கிய ராஜா, இந்த அனைத்து துறைகளிலும் தொடர் வெற்றிகளை பெற்று பயணிக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

Similar News