சினிமா
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர் கைது
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வெப் தொடர் இயக்குனர் ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசிப்பவர் ரஞ்சித் (வயது 25). இவரது சொந்த ஊர் உடுமலைப்பேட்டை ஆகும். இவர், வெப் தொடர்களை இயக்கி வருகிறார். இவரது தொடரில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த நடிகை சுவேதா (21) நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சுவேதா, அடையாறு துணை கமிஷனர் விக்ரமனிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர், வெப் தொடர் இயக்குனர் ரஞ்சித் மற்றும் அவரது உதவியாளர்கள் என்னை காதலிக்க சொல்லியும், பாலியல் தொல்லையும் கொடுத்து வருவதாக கூறி இருந்தார்.
இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கானத்தூர் போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
அதில் நடிகைக்கு, இயக்குனர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். நடிகையை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்த அவரது உதவியாளர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.